India
“திருநங்கை அனன்யா மரணத்திற்கு தவறான அறுவை சிகிச்சைதான் காரணமா?” - வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாக விளங்கியவர் அனன்யா குமாரி அலெக்ஸ் (28). கொல்லம் மாவட்டம், பெருமண் பகுதியைச் சேர்ந்த இவர், கேரளாவின் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கி (ஆர்.ஜே) ஆவார். மேக்கப் கலைஞர் மற்றும் டி.வி. செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார் அனன்யா.
திருநங்கைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அனன்யா, அண்மையில் நடந்த கேரள சட்டப்பேரவை தேர்தலில் மனு தாக்கல் செய்து, பின்னர் போட்டியிலிருந்து விலகினார்.
இந்நிலையில் அனன்யா குமாரி அலெக்ஸ், கொச்சியில் அவர் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அனன்யா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலிஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனை ஒன்றில் பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் அனன்யா. ஆனால், இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை தனது சிகிச்சை பதிவுகளை கொடுக்க மறுத்து வருகிறது என்றும் அனன்யா குற்றம்சாட்டினார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஒரு வருடமாக, பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது பிறப்புறுப்பு பகுதியில் கடுமையான வலி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார் அனன்யா.
மேலும், இந்தியாவின் மற்ற இடங்களில் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது என்றும் இங்கு ஒரு மருத்துவ அலட்சியத்தின் பலியாக நான் உங்கள் முன் நிற்கிறேன் என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் அனன்யா.
இந்நிலையில், மர்மமான முறையில் அவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “அனன்யாவின் மரணத்துக்கு நீதி வேண்டும். பாலின மாற்று அறுவை சிகிச்சை முறைகளை அரசு கண்காணிக்க வேண்டும்” என அனன்யாவின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!