India
“உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டிஸ்மிஸ் செய்க” - பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம்!
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ஜல்சக்தி அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, மருத்துவ வல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் அளித்த பெண், 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஒட்டுக்கேட்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிரொலித்துள்ளது. ஒட்டுக்கேட்பு பிரச்சனை குறித்து எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால், மக்களவையும், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, “பெகாசஸ் ஒட்டுக் கேட்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். இந்த விவாதத்தை எவ்வாறு கையாள்வது குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும்.
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்திய பாதுகாப்புப் படைகள், கேபினெட் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களை வெளிநாட்டு உளவு செயலி மூலம் உளவு பார்த்தது என்பது, தேசத்துரோகம் மட்டுமல்ல, தேசப்பாதுகாப்புக்கு மன்னிக்க முடியாத விதிமுறை மீறல்.
அரசியலமைப்புச் சட்டம் காலில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது, சட்டத்தின் ஆட்சி கொலை செய்யப்பட்டுள்ளது, பிரதமர், உள்துறை அமைச்சர், இந்த அரசின் பதவிப் பிரமாணம் என்பது பொய்யானது என்பது தெரிந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், “சட்டத்தின்படி நீங்கள் அரசை நடத்த முடியாது என்றால், அந்த இடத்தை நீங்கள் ஆக்கிரமித்துள்ளீர்கள் என்றுதான் அர்த்தம். பெகாசஸ் உளவு செயலியை வாங்குவதற்கு உள்துறை அமைச்சர் அல்லது பிரதமர் இருவரில் யார் உத்தரவிட்டது, எவ்வளவு பணம் இதற்காகச் செலவிடப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!