India

“தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கட்” : விழிப்புணர்வுக்கு பதில் பயத்தை விதைக்கும் யோகி அரசு !

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகமானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்த போதும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் தயக்கம் காட்டிய வருகின்றனர்.

மக்கள் தடுப்பூசி மீது கொண்டுள்ள பயத்தைப் போக்க அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மருத்துவர்களும், உலக சுகாதார அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குப் பதில், தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே சம்பளம் தருவோம் என அரசு ஊழியர்களிடம் உத்தர பிரதேச அரசு மிரட்டும் தோணியில் கூறியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பிரோசாபாத் மாவட்ட ஆட்சியர் சந்திர விஜய் சிங்தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது, அரசு ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்படி தடுப்பூசி போடாதவர்களுக்கு ஊதியம் நிறுத்தி வைக்கப்படும் என வாய்மொழி உத்தரவாக தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் இந்த மாதம் ஊதியம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்திலேயே தடுப்பூசி போடுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் ஊதியம் கிடையாது என ஆட்சியர் வாய்மொழி உத்தரவால், மே மாத ஊதியம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் ஊழியர்கள் பலரும் தடுப்பூசி போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியரின் இந்த உத்தரவுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Also Read: “கொரோனா நோயைத் தடுப்பதில் ஒன்றிய பா.ஜ.க அரசு மெத்தனம் காட்டுகிறது” : டி.ஆர்.பாலு MP குற்றச்சாட்டு !