India

குவிந்து கிடக்கும் குப்பைகள்; பன்றிகள் சுற்றித் திரியும் அவலம்; நோய் பரப்பும் கூடாரமான பீகார் மருத்துவனை!

பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான அரசு மருத்துவமனை உள்ளது. தற்போது இந்த மருத்துவமனையில் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையைச் சுற்றிலும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால், நோயாளிகளும், மருத்துவர்களும் அவதிப்படுகின்றனர். மேலும் இங்குச் சாதாரணமாக மழை பெய்தாலே மருத்துவமனை முழுவதும் சாக்கடை நீர் தேங்கிவிடும் என்கிறார்கள் நோயாளிகள்.

அதுமட்டுமில்லாமல், தொடர் மழைபெய்தால் மருத்துவமனையின் கீழ் தளம் வரை தண்ணீர் தேங்கி நிற்கும் என நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மருத்துவமனையின் அருகே கழிவுகள், கொட்டப்படுவதால், பன்றிகளின் கூட்டம் கூட்டமாக வந்து மருத்துவமனையைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்கின்றன.

இந்த மருத்துவமனை அமைத்து 100 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரு முறை கூட புனரமைக்கப்படாததால், கட்டிடங்கள் இடித்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேபோல் மருத்துவமனையின் உள்பகுதியிலும் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என நோயாளிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

கொரோனா பரவல் உச்சமடைந்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகள் மருத்துவமனையை நாடிவரும் நிலையில், மருத்துவமனையே நோயைப் பரப்பும் இடமாக இருக்கிறதே என மருத்துவர்களும், நோயாளிகளும் வேதனையுடன் கூறுகின்றனர். இம்மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மோடி அரசின் தவறான வெளியுறவு கொள்கையால் பேராபத்தில் இலங்கையில் வாழும் தமிழர்கள் - கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை