India

"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்!

கொரோனா இரண்டாம் அலையால் மக்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை விமர்சித்து தலைநகர் டெல்லியில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

அந்தச் சுவரொட்டிகளில் “நம்முடைய குழந்தைகளுக்குத் தேவைப்படும் தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்” என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லியில் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டியது தொடர்பாக 25க்கும் மேற்பட்டோரை போலிஸார் கைது செய்தனர். இதற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியது குற்றமா, எங்களையும் கைது செய்யுங்கள் என்று ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வை விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, #ArrestMetoo “என்னையும் கைது செய்யுங்கள்” என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் நடிகை ஓவியா, பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, “இது ஜனநாயகமா?” எனக் கேள்வி எழுப்பியதோடு, #ArrestMetoo என்ற ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Also Read: “கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு!