India

“தடுப்பூசிக்காக மக்களை அலைக்கழிக்கப்பது போராட்டங்களுக்கே வழி வகுக்கும்” - ப.சிதம்பரம் எச்சரிக்கை!

மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அந்தளவிற்கு போதுமான தடுப்பூசிகள் அரசின் கையிருப்பில் உள்ளதா? என மத்திய அரசுக்கு மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் வருகிற 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவை முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

Also Read: “அரசு தோல்வியடைந்துவிட்டது.. நாம் மக்களுக்கு உதவுவோம்.. இதுவே காங்கிரஸின் தர்மம்” - ராகுல் வேண்டுகோள்!

அதே நேரம் இந்த முடிவு மத்திய அரசுக்கு மிகப்பெரும் பொறுப்பை கொடுத்திருப்பதாக கூறியுள்ள அவர், நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், தடுப்பூசி கையிருப்பே முதலும், முக்கியமுமான தேவையாகும் என தெரிவித்துள்ளார்.

மே 1-ந் தேதி முதல் அதிக அளவில் மக்கள் தடுப்பூசிக்காக ஆஸ்பத்திரிகளை முற்றுகையிடுவார்கள் எனவும், இதனால் தடுப்பூசியின் தேவை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ள ப.சிதம்பரம், இதை சமாளிப்பதற்கு நாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளதா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே நேரம் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்ற அரசின் வாதம் உண்மையற்றது எனவும், ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி இல்லாமல் மக்கள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டால் அது மிகப்பெரும் போராட்டங்களுக்கு வழி வகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: கொரோனாவால் தவிக்கும் இந்தியா: உதவ முன் வந்த பாகிஸ்தானியர்கள் : உதவியை மறுக்கும் மோடி அரசு!