India

“எங்களுக்கு ஓட்டு போட்டால் இலவச தடுப்பூசி” - உயிருக்குப் போராடும் மக்களிடம் பேரம் பேசும் பா.ஜ.க!

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றிற்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி நிறுவனம் மத்திய அரசு, மாநில அரசு, தனியார் நிறுவனங்கள் என மூன்று மாதிரியான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கொரோனா தொற்று நாட்டையே சூறையாடி வரும் நிலையில், மக்களுக்கு தடுப்பூசி அளித்துக் காக்கும் கடமையை மறந்து கார்ப்பரேட்களுக்கு லாபம் குவித்துக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது மோடி அரசு.

நாடு முழுவதும் இலவச தடுப்பூசி வழங்க முன்வராத பிரதமர் மோடி, மேற்கு வங்கத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அங்கு இலவச தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக, அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவித்த பா.ஜ.க அரசு, தற்போது வரை இலவச தடுப்பூசி அளிக்காமல் மக்களை ஏமாற்றி வருகிறது.

அதேபோல, தற்போதும் தேர்தலைக் குறிவைத்து, கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவோம் என மேற்கு வங்க மக்களை பா.ஜ.க ஏமாற்ற முயல்வது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

Also Read: வட மாநிலங்களின் நிலைமை தமிழகத்திலுமா? - கொரோனா நோயாளியின் சடலத்தை உறவினர்கள் எடுத்துச்சென்ற அவலம்!