India

இப்படியும் சில காவல்துறை அதிகாரிகள்... பைக் ரைடர் வெளியிட்ட வீடியோவால் குவியும் பாராட்டு! #ViralVideo

இந்தியாவில் நெடுந்தூர பயணங்களுக்கு கார், ரயில் போன்ற போக்குவரத்திற்கு மாற்றாக பைக்கையே இளைஞர்கள் அதிகம் விரும்புகிறார்கள். இப்படியான நெடுந்தூர பயணங்களுக்கு குழுவாகவோ தனியாகவோ இளைஞர்கள் செல்கிறார்கள். இப்படிச் செல்லும்போது தங்களுக்கு ஏற்படும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பைக் ரைடர் ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பைக் ரைடர் ஆனி அருண் என்ற இளைஞர், பாண்டிச்சேரியிலிருந்து தென்காசிக்கு அவருடைய கே.டி.எம் பைக்கில் சென்றுள்ளார். அப்போது சாலையோரமாக நின்று கொண்டிருந்த காவலர் ஒருவர் அவரை வழி மறித்து நிறுத்தியுள்ளார்.

காவலர் தம்மை வழிமறித்து நிறுத்தியதால் இளைஞர் முதலில் பதட்டம் அடைகிறார். பிறகு, வாகன பதிவு சான்றிதழ், இன்சூரன்ஸ் போன்ற சான்றுகளை காட்டச் சொல்வார் என நினைத்திருக்கிறார்.

பின்னர், இளைஞரை நிறுத்திய காவலர் நீங்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவரா என கேட்கிறார். அதற்கு அந்த இளைஞர் ஆமாம் என கூறுகிறார். பிறகு அந்த காவலர், இளைஞருக்கு முன்பாக சென்ற பேருந்தைச் சுட்டிக்காட்டி, அதில் பயணிக்கும் பெண்மணி ஒருவர் இந்த மருந்து பாட்டிலை தவறவிட்டுவிட்டார். நீங்கள் வேகமாகச் சென்று பேருந்தில் செல்லும் அவரிடம் கொடுத்துவிட முடியுமா எனக் கேட்கிறார்.

உடனே மருந்து பாட்டிலை பெற்றுக்கொண்ட அந்த பைக் ரைடர், வேகமாக சென்று, பேருந்தை நெருங்கி, ஓட்டுநரிடம் சைகை காட்டி பேருந்தை நிறுத்தச் சொல்கிறார்.

பின்னர், பேருந்தில் ஏறி இளைஞர் நடந்தவற்றை கூறி, மருந்து பாட்டிலை அந்தப் பெண்மணியிடம் கொடுக்கிறார். இந்தக் காட்சிகள் அனைத்தும் இளைஞரின் தலைக்கவசத்திலிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது.

இந்த வீடியோவை அந்தக் கர்நாடக வாலிபர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் காவலரையும், இளைஞரையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Also Read: சேனல்களை சட்டவிரோதமாக ஸ்ட்ரீமிங் செய்து பலநூறு கோடி மோசடி செய்த நிறுவனம்... சைபர் கிரைம் நடவடிக்கை!