India

“நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றால்..?” - கிண்டலுக்குள்ளாகும் பா.ஜ.க!

மற்ற வேட்பாளர்களை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால், மறுதேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக நோட்டா என்ற வாய்ப்பை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. ஆனால் நோட்டா அதிக வாக்குகள் பெற்றாலும், அதற்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் நோட்டா கொண்டு வரப்பட்டதன் நோக்கமே சிதைவதாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை விட, நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தால், அங்கு மறு தேர்தல் நடத்தவும், நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, இதுகுறித்து மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தது.

இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, “தமிழகத்தில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை மட்டுமே எப்போதும் பெறும் பா.ஜ.க-வுக்கு இதனால் பாதிப்பு ஒன்றுமில்லையே?” என கிண்டல் செய்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தனித்துப் போட்டியிட்டால் வழக்கம்போல் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே தமிழகத்தில் பெற முடியும் என உணர்ந்து, அ.தி.மு.க-வை மிரட்டி பா.ஜ.க கூட்டணியில் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: தோல்வி பயத்தால் வேட்பாளரை மாற்றிய அ.தி.மு.க... அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ராம.பழனிசாமியின் ஆதரவாளர்கள்!