India
Zomato டெலிவரி பாய் மீது அபாண்ட குற்றச்சாட்டு... பெங்களூரு பெண் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
பெங்களூருவில் அழகுக்கலை நிபுணராகவும், பகுதி நேர சமூக வலைதள இன்ப்ளூயன்சராகவும் பணியாற்றி வருபவர் ஹிதேஷா சந்திரனி. கடந்த இரு தினங்களுக்கு முன் இவர், சமூக வலைதளங்களில் ஒரு பதிவை இட்டுள்ளார்.
அதில், ‘கடந்த மார்ச் 9ம் தேதி Zomato செயலில் உணவு செய்தேன். மாலை 4.30 மணிக்கு வர வேண்டிய உணவு வராததால், வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்து எனது ஆர்டரை ரத்து செய்யும்படி பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த காமராஜ் என்கிற உணவு டெலிவரி பாய், என்னிடம் கடுமையான நடந்துகொண்டார்.
இதனால், எங்களுக்குள் வாக்குவாதம் நடந்தது. ஆர்டரை நான் கேன்சல் செய்துவிட்டேன். பணம் கொடுக்கமாட்டேன் என்று சொல்லியபோது, அவர் என்னைத் தள்ளிவிட்டு உணவையும் பறித்துச் சென்றுவிட்டார்’ என்று அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுருந்தார்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலிஸார் டெலிவரி பாய் காமராஜை கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். மேலும் அவரை Zomato நிறுவனமும் தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த பிரச்சனை குறித்துடெலிவரி பாய் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், "நான் உணவை கொண்டு சென்று கொடுத்ததும் அந்தப் பெண் அதை என்னிடம் இருந்து வாங்கிக்கொண்டார். நான் உணவுக்கான பணத்தை தரவேண்டும் என அந்த பெண்ணிடம் கூறினேன். அப்போது அவர், உணவுக்கான ஆர்டர் ரத்து செய்துவிட்டதாக தெரிவித்தார்.
இதற்கு நான் உணவை திரும்ப கேட்டேன். அதற்கு அவர் உணவை தர மறுத்து என்னைத் திட்டினார். இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது அந்தப் பெண் என்னைத் திட்டிக்கொண்டே செருப்பால் அடித்தார்.
எனது பாதுகாப்பிற்காக நான் அவரது கையைப் பிடித்தேன். அப்போது, அவரது கையில் அணிந்திருந்த மோதிரத்தை வைத்து தனது முகத்தைக் கீறிக் கொண்டார். இதனால், நான் அங்கிருந்து சென்றுவிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணை குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரையும் விசாரித்துள்ளோம். விசாரணையில், அந்தப் பெண் ஹிதேஷா மீதே தவறு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
உணவு தாமதமாக டெலிவரி செய்யப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட உணவகமே காரணம். ஆனால், இதைப் புரிந்துகொள்ளாமல் அந்தப் பெண் வீணாக வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கிறார். இதுகுறித்து அடுத்தகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட டெலிவரி பாய் காமராஜுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை அவர் 5000க்கும் அதிகமான டெலிவரிகள் செய்து, 4.75 ரேட்டிங்கை பெற்றுள்ளார். வாடிக்கையாளர்களும் இதுவரை அவர் மீது எந்தவித புகாரும் அளித்ததில்லை. அப்படி இருக்கும்போது, இப்படி தவறாக ஒரு பெண் உருவாக்கிய வீடியோவை வைத்து Zomato நிறுவனம் அவரை பணியில் இருந்து நீக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை 97% அதிகமான தினக்கூலி தொழிலாளர்கள் எந்தவித அமைப்பு வரைமுறைக்குள்ளும் வராமலே இருக்கிறார்கள். அவர்களுக்கு பணிச்சூழலில் ஏற்படும் இதுபோன்ற பாதிப்புகள் குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை. அதனாலேயே, இதுபோன்ற வன்முறைகள் நிகழ்கின்றன என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதள இன்ப்ளூயன்சர் என்பதால், அந்தப் பெண் ஹிதேஷா பதிவிட்ட வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர். தனிநபர் பொறுப்பற்று அந்தப்பெண் செய்த இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பெங்களூரு காவல் நிலையத்தில் காமராஜ் அளித்த புகாரின் பேரில், ஹிதேஷா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!