India

முத்தூட் நிறுவன அதிபர் 4வது மாடியில் இருந்து விழுந்து மரணம்: தற்கொலையா? விபத்தா? பின்னணியில் இருப்பது ?

முத்தூட் குழுமத் தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். 72 வயதாகும் எம்.ஜி.ஜார்ஜ் கடந்த வெள்ளிகிழமையன்று தனது வீட்டின் 4வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுறது. இதனையடுத்து அவரை மீட்டு டெல்லியின் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவு காரணமாக ஜார்ஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

இதனிடைய டெல்லி போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையைக் கொண்டு முதல்கட்ட விசாரணையை போலிஸார் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் சந்தேகிக்கும் விதமாக எந்த ஒரு மோசமான தடமும் இல்லை; இறப்பதற்கு முன்பு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை” எனத் தெரியவந்துள்ளது.

மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு ஜார்ஜ் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றோம் என போலிஸார் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் ஆசியா பத்திரிகை வெளியிட்ட இந்தியாவில் தலைசிறந்த டாப் 50 மனிதர்கள் பட்டியலில் எம்.ஜி.ஜார்ஜ் இடம் பிடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாது, கேரளாவின் பெரிய பணக்காரராகவும் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலை கூட்டமைப்புக்கான கேரள மாநில கவுன்சில் தலைவராகவும் எம்.ஜி.ஜார்ஜ் இருந்துள்ளார். இந்நிலையில் எம்.ஜி.ஜார்ஜ் மரணம் பல்வேறு தரப்பினருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜார்ஜ் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எம்.ஜி.ஜார்ஜ் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி அரசு உண்மையை வெளியிடவேண்டும் என கோரிக்கையும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

Also Read: இனமான பேராசிரியர் வாழ்நாள் எல்லாம் கடைபிடித்த ‘ஐந்து வரிசை’ : நெகிழ வைக்கும் வரலாற்றுச் சம்பவங்கள்!