India

“16.8 கோடி குழந்தைகளின் கல்வி பாதிப்பு” : கொரோனா ஊரடங்கால் நிகழ்ந்த அவலம் - ஐ.நா அதிர்ச்சி தகவல்!

சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. பிறகு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. இதனால் பள்ளிகள் மூடப்பட்டன. பின்னர் ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.

தற்போது, கொரோனா வைரஸ் வீரியம் குறைந்ததை அடுத்து, பல நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பள்ளி -கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் முழு அளவில் கல்வி நிலையங்கள் திறக்கப்படவில்லை. அனைத்து மாணவர்களும் நேரடியாக வகுப்புகளில் பங்கேற்கும் சூழல் இன்னும் உருவாகவில்லை.

இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கம் இருந்துவருவதால், பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான யுனிசெப் ஆய்வு செய்தது. இதில் 16.8 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கடந்த ஒரு வருடமாக பள்ளி செல்லவில்லை என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதேபோல், உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டாக நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை. மேலும் முழு மற்றும் பாதியளவு கல்வி பள்ளிகள் மூடலால் 88.8 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரியவந்துள்ளது.

மேலும், இந்தியாவில் எட்டு மாநிலங்களில் மட்டுமே 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 11 மாநிலங்களில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு வருடமாகப் பள்ளிகள் மூடப்பட்டே இருப்பதால் மாணவர்களுக்கும், பள்ளிக்குமான நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Also Read: இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : தடுப்பு நடவடிக்கைகளில் கோட்டைவிட்ட மோடி அரசு!