India

பனி படர்ந்த இமய மலையில் குவிந்து கிடக்கும் மனித எலும்புகள்: ‘மர்ம ஏரி’ ரூப்குந்த் பற்றிய அதிர்ச்சி தகவல்!

இமயமலையில், 5 நாள் மலையேற்றத்தில் பிறகு நமது கண்ணில் ரூப்குந்த் ஏரி தென்படும். இந்த ஏரி கடல் மட்டத்தில் இருந்து 5029 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த ஏரியை பார்க்க அழகாக இருக்கும். அதே நேரத்தில் ஏதாவது அபாயகரமான இடத்திற்கு வந்துவிட்டோமா என நினைக்கத்தோன்றும். ஏன் என்றால், ரூப்குந்த் ஏரி முழுவதும் மனித எலும்புகள் சிதறிக் கிடப்பதே இதற்குக் காரணமாகும்.

இந்த ஏரியை கடந்த 1942ம் ஆண்டு பிரிட்டிஷ் வன அதிகாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். ஏரியில் பனிக்கட்டி உருகும் போதுதான் இந்த மனித எலும்புகள் தெரிகின்றன. சுமார் 600 - 800 பேரின் உடல் எச்சங்கள் இங்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஏரியை உத்தராகண்ட் அரசு 'மர்ம ஏரி' என்றழைக்கிறது.

இமயமலையில் உள்ள இந்த ஏரியில் எப்படி மனித எலும்புகள் வந்தது என அரை நூற்றாண்டுக்கு காலமாக மானுடவியலாளர்கள், அறிவியலாளர்கள் என பலர் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஆனால், யார் இந்த மக்கள்? அவர்கள் எப்போது இறந்தார்கள்? அவர்கள் எப்படி இறந்தார்கள்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்ற பல கேள்விகளுக்கு இதுகாறும் விடை கிடைக்கவே இல்லை.

இந்த எலும்புகள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் உலா வருகின்றன. அதில் ஒன்று, ஓர் இந்திய அரசர், அவரது மனைவி மற்றும் அரசப் பணியாளர்களுடன் 870 ஆண்டுகளுக்கு முன் பனிப்புயலில் சிக்கி இறந்து விட்டதாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

மற்றொன்று, 1841ம் ஆண்டு திபெத்தை ஆக்கிரமிக்க நினைத்த இந்தியப் படையினர் தோற்கடிக்கப்பட்டார்கள். 70-க்கு மேற்பட்டவர்கள் இமய மலையிலேயே தங்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உண்டானது. அவர்கள் இமய மலையிலேயே இறந்து விட்டார்கள் என்ற கதையும் உண்டு. மேலும், பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட கல்லறைப் பகுதியாக இந்த ஏரி இருந்திருக்கலாம் என மற்றொரு கதையும் உலாவருகிறது.

இப்படி எத்தனை கதைகள் சொல்லப்பட்டு வந்தாலும், இறந்தவர்கள் பெரும்பாலும் உயரமானவர்கள், அதோடு 35 - 40 வயது கொண்ட நடுத்தர வயதுடையவர்கள். மேலும் இந்த எலும்புகளில் குழந்தைகள் அல்லது சிறுவர்கள் இல்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மர்ம ஏரி குறித்து, இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த 16 குழுக்களை கொண்ட 28 பேர் ஐந்து ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். 38 உடல்களின் எலும்புகளை மரபணு பரிசோதனை செய்தபோது, அதில் சில எலும்புகள் 1,200 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இதனால், இந்த ஏரியில் இறந்து கிடப்பவர்கள் பல்வேறு காலகட்டங்களில் இறந்திருக்க அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

"ரூப் குண்ட் ஏரியில் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒரே நிகழ்வில் மொத்த இறப்புகளும் நிகழவில்லை என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம்" என்கிறார் இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கியவரும் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தன் முனைவர் பட்ட ஆய்வாளருமான இடாயின் ஹார்னே.

மேலும் அவர் கூறுகையில், "எந்தவித ஆயுதங்களோ, வணிக பொருட்களோ இந்த இடத்தில் காணப்படவில்லை. இந்த ஏரி வர்த்தக தடங்களில் இல்லை. இங்கு இருந்த எலும்புகளில் நடத்திய சோதனையில் நோய் உண்டாக்கும் பாக்டீரியா இருந்ததற்கான எந்த ஒரு சான்றும் கிடைக்கவில்லை என மரபணு சோதனை முடிவுகள் கூறுகின்றன. ஒருவேளை அது கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் நோய் வாய்ப்பட்டு இறந்தார்கள் எனக் கூறலாம்.

தற்போது அப்பகுதியில் இருக்கும் ஆன்மிகத் தளங்கள் 19-ம் நூற்றாண்டின் கடைசி வரை வெளியே தெரியவில்லை. ஆனால் உள்ளூர் கோயில்களில் இருக்கும் 8வது மற்றும் 10வது நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் ஆன்மிக தலங்கள் குறித்துக் கூறுகின்றன. எனவே அந்த ஏரியில் இருக்கும் சில உடல்கள், ஓர் ஆன்மிக யாத்திரைப் பயணம் மேற்கொண்ட மக்களுடையதாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.

எனவே, எதிர்பாராத விதமாக, ஐரோப்பிய மக்கள் இந்த ஆன்மிக தலங்களைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கலாம் அல்லது மரபணு ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட கிழக்கு மத்திய தரைக்கடலைச் சேர்ந்த வம்சாவளி மக்கள் குழுவாக இருக்கலாம். அவர்கள் இந்தப் பிராந்தியத்தில் பல தலைமுறையாக வசித்து வந்தவர்களா? என பல கேள்விகள் இந்த விவகாரத்தில் எழுகின்றன." என தெரிவித்துள்ளார்.

நன்றி - பிபிசி தமிழ்

Also Read: “அரசு பணி கேட்டு நாடிய பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; வசமாக சிக்கிய கர்நாடக பா.ஜ.க அமைச்சர்” (வீடியோ)