India

25,000 ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்து பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான முதியவர் : சிகிச்சைக்கு பணமின்றி அவதி!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள மொஹல்லா கிரி அலி பெக் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப். சைக்கிள் மெக்கானிக்கான இவர் கடந்த 25 ஆண்டுகளாக, அப்பகுதியில் ஆதரவற்றவர்களின் உடல்களை அவரது சொந்த செலவில் அடக்கம் செய்து வருகிறார். இப்படி 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை முகமது ஷெரீப் அடக்கம் செய்துள்ளார்.

தற்போது இவர் முதுமையால் நோய்வாய்ப்பட்டு, உள்ளூர் மருத்துவரை பார்க்கக் கூட பணம் இல்லாமல் வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். எத்தனையோ பேரின் உடலை அடக்கம் செய்தவருக்கு, ஒருவர் கூட உதவிக்கு வரவில்லையே என முகமது ஷெரீப் குடும்பத்தினர் மன வருத்தத்தில் உள்ளனர்.

மேலும், இதை விட ஒரு மோசமான கொடுமை முகமது ஷெரீப் நடந்துள்ளது. அது என்னவென்றால், இவரின் தன்னலமில்லா சேவையைப் பாராட்டி கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருது இன்னும் அவரின் கைக்கு வந்துசேரவில்லை என்பது தான் அது. “என் தந்தை பத்மஸ்ரீ விருது பெறாமலேயே சென்றுவிடுவாரோ எனக் கவலையாக இருப்பதாக” இவரின் மகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முகமது ஷெரீப் மகன் கூறுகையில்,‘‘என் தந்தையின் ஒரு மாத மருத்துவச் செலவு 4 ஆயிரம் ரூபாய் ஆகிறது. இந்த மோசமான சூழலில் அதை கூட செலவழிக்க எங்களுக்கு வழியில்லை. இதுவரை உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தோம். அதற்கு கூட இப்போது பணமில்லாமல் தவிக்கிறோம்.

கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் எனது தந்தையின் சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது என தெரிவித்திருந்தது. உங்களுக்கு அழைப்பு வரும்போது, டெல்லிக்கு வந்து விருதைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறப்பட்டது.

இதற்காக என் தந்தை 2500 ரூபாய் கடன் பெற்று டெல்லிக்கு டிக்கெட் எடுத்திருந்தார். கடைசி நேரத்தில் கொரோன வைரஸ் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதுவரை என் தந்தைக்கு பத்மஸ்ரீ விருது கைக்கு வந்து சேரவில்லை. இந்த விருதைப் பார்க்காமலேயே என் தந்தை இறந்துவிடுவாரோ” என கவலையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Also Read: BJP-ன் நிலையில் அதிமுக: காலி சேர்களை ஃபோட்டோ எடுத்த பத்திரிக்கையாளர் மீது எடப்பாடி அடியாட்கள் தாக்குதல்!