India

“இருப்பது ஒரு டி.வி; ஒரு மின்விசிறி; மின் கட்டணமோ 1 லட்சத்து 50 ஆயிரம்” : அதிர்ச்சியில் விவசாயி தற்கொலை!

உத்தர பிரதேச மாநிலம், அட்ராலி தெஹ்ஸிலி மாவட்டத்தில் உள்ளது சுனைரா என்ற கிராமம். இந்த கிராமத்தில் ராம்ஜி லால் என்ற விவசாயி வசித்து வந்தார்.

இந்நிலையில் இவரது வீட்டிற்கு ரூபாய் 1 லட்சத்து 50 அயிரம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என மின் ஊழியர்கள் கட்டணத்திற்கான ரசீது கொடுத்துள்ளனர். அப்போது ராம்ஜி லால், 'இது எப்படி சாத்தியம்? எங்கள் வீட்டில் ஒரு டி.வி மற்றும் ஒரு மின் விசிறி மட்டுமே உள்ளது. இப்படி இருக்கும்போது எங்கள் வீட்டிற்கு எப்படி இவ்வளவு பெரிய மிக் கட்டண தொகை வந்தது?' என மின் ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.

அப்போது மின் ஊழியர்கள், இது எங்களுக்குத் தெரியாது பணத்தைக் கட்டித்தான் ஆக வேண்டும் என ஆவேசமாக அவரிடம் கூறியுள்ளனர். மேலும் ராம்ஜி லால், அவர்களிடம் இவ்வளவு கட்டணம் செலுத்த என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மின் ஊழியர்கள் குடும்பத்தார் முன்னிலையில் ராம்ஜி லால் கன்னத்தில் அறைந்துள்ளனர்.

பின்னர் இது பற்றி ராம்ஜி லால் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் இவரது புகார் குறித்து எந்த விசாரணையும் நடத்தவில்லை. இதனால் மன வேதனையடைந்த விவசாயி ராம்ஜி லால் ஞாயிறன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் ராம்ஜி லாலின் உடலை மின்சாரத் துறை அலுவலகத்தின் முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ராம்ஜி லால் தற்கொலைக்குக் காரணமான மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து ராம்ஜி லாலின் உடலை உறவினர்கள் எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

Also Read: ஏமனின் அவலத்தை உலகத்துக்குக் காட்டிய 13 வயது சிறுமி : பட்டினியில் வாடும் 4 லட்சம் குழந்தைகள் !