India

“விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விகளை எதிர்கொள்ள அஞ்சியே கூட்டத்தொடர் ரத்து” - சிவசேனா குற்றச்சாட்டு!

விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விகளைத் தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய பா.ஜ.க அரசு ரத்து செய்துள்ளது என சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை பா.ஜ.க அரசு ஏற்க மறுப்பதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இதற்கிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்துள்ளது பா.ஜ.க அரசு. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டாலும், உண்மையான காரணம் விவசாயிகளின் போராட்டம் குறித்து அரசு அச்சமடைந்திருப்பதே எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள கட்டுரையில், “வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

அந்தப் போராட்டம் குறித்து கேள்விகள், விவாதங்கள் எழும் என்பதாலேயே மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்த விருப்பமில்லாமல் ரத்து செய்துள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்காக கடந்த 10-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். புதிய நாடாளுமன்றம் கட்ட இப்போது ஆயிரம் கோடி செலவிட வேண்டிய அவசியம என்ன இருக்கிறது? தற்போது இருக்கும் நாடாளுமன்றக் கட்டடம் இன்னும் 50 முதல் 75 ஆண்டுகள்வரை தாங்கக்கூடிய நிலையில் வலுவாக இருக்கும் நிலையில் இது அவசியமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: “பி.எம் கிசான் திட்டத்தில் முறைகேடு” : தமிழகத்தை தொடர்ந்து பா.ஜ.க ஆளும் இமாச்சலில் ரூ.12 கோடி நிதி மோசடி!