India

“விவசாயிகளை மிகமோசமாக நடத்துகிறது மோடி அரசு” - போராட்டத்தில் பங்கேற்ற சீக்கிய மதகுரு வேதனையால் தற்கொலை!

டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட சீக்கிய மதகுரு ராம்சிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். விவசாயிகளின் தொடர் போராட்டம் இன்று 21-வது நாளை எட்டியுள்ளது.

விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் குண்ட்லி எல்லையில் ஹரியானா மாநிலம் கர்னூலைச் சேர்ந்த பாபா ராம் சிங் என்பவரும் கலந்துகொண்டார். இவர் சீக்கிய மதகுருவாகவும் இருந்து வருகிறார்.

போராட்டத்தில் விவசாயிகளுடன் கலந்துகொண்ட இவர் விவசாயிகள் போராட்டக்களத்தில் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்து மனம் நொந்து தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதி வைத்த கடிதத்தில், போராட்டம் நடத்தும் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், போராடும் விவசாயிகளை அரசு மிக மோசமாக நடத்தி வருவதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, கடும் குளிர் மற்றும் விபத்துகளால் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “டெல்லியில் குளிர், விபத்து காரணமாக 20 விவசாயிகள் பலி” : அரசின் பிடிவாதத்தால் தொடரும் போராட்டம்!