India

“அரசுடனான பேச்சுவார்த்தை தடைபட்டதற்கு அமித்ஷாவே காரணம்” - விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டெல்லியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 16-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. அதேநேரம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்றும் முரண்டு பிடித்து வருகிறது.

தங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால் விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளனர். 14-ந் தேதி டெல்லியை முழுமையாக முற்றுகையிடப் போவதாகவும், டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் முற்றுகையிடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தடைபட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவே காரணம் என்று அகில இந்திய விவசாய சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய விவசாய சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தனர்.

வேளாண்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது அமித்ஷா இடைமறித்து சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று கூறினார். மாறாக பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததற்கு விவசாய சங்கங்கள் மீது குற்றம்சாட்டுவது சரியல்ல. இதற்கு வேளாண்துறை அமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

அமித்ஷாவும், நிதி ஆயோக் தலைவர் அமித் காந்தும் அம்பானி, அதானிகளுக்கு ஆதரவாக, அவர்களின் உத்தரவுப்படி செயல்படுகிறார்கள். எனவேதான் மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற முடியாது என்று கூறுகிறார்கள்.

இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் ஓயாது. விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “வேளாண் சட்டங்கள் குறித்து என்னுடன் விவாதிக்கத் தயாரா?” - எடப்பாடி பழனிசாமிக்கு பி.ஆர்.பாண்டியன் சவால்!