India

“ஆணவத்தின் நாற்காலியில் இருந்து இறங்கி வாருங்கள்; விவசாயிகள் குறித்து சிந்தியுங்கள்” - ராகுல் காட்டம்!

“ஆணவத்தின் நாற்காலியில் இருந்து இறங்கி வாருங்கள். விவசாயிகளுக்கான உரிமைகளை வழங்குவது குறித்து சிந்தியுங்கள்” என மோடி அரசை வலியுறுத்தியுள்ளார் ராகுல் காந்தி.

பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியை நோக்கி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளைக் கலைக்க கண்ணீர் புகை குண்டு வீச்சு, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது, தடியடி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பா.ஜ.க அரசின் காவல்துறை. விவசாயிகளின் போராட்டத்தை விமர்சித்த பிரதமர் மோடி, இப்போராட்டம் எதிர்க்கட்சிகளின் தந்திரம் என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு மத்திய பா.ஜ.க அரசு, போராட்டத்தில் ஈடுபடும் சில விவசாயிகள் சங்கங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., தனது ட்விட்டர் பக்கத்தில், “உணவு உற்பத்தியாளர்கள் போராட்டக் களங்களிலும் சாலைகளிலும் அமர்ந்து போராடி வருகிறார்கள். தொலைக்காட்சிகளிலும் பேசி வருகிறார்கள். விவசாயிகளின் கடின உழைப்புக்கு நாம் அனைவரும் கடன்பட்டிருக்கிறோம்.

விவசாயிகளுக்கு நீதி வழங்குவதன் மூலம் மட்டுமே இந்தக் கடனை திருப்பிச் செலுத்தமுடியும். அவர்களை மோசமாக நடத்துவதன் மூலமோ அல்லது தடியடிப் பிரயோகத்தின் மூலமோ அல்லது அவர்களுக்கு எதிராக கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதன் மூலமோ நிறைவடையாது.

விழித்துக் கொள்ளுங்கள், ஆணவத்தின் நாற்காலியில் இருந்து இறங்கி வாருங்கள். விவசாயிகளுக்கு அவர்களுக்கான உரிமைகளை வழங்குவது குறித்து சிந்தியுங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.

Also Read: விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை : அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை!