India

தடைகளை அகற்றி பா.ஜ.க அரசுக்கு எதிராக பேரணியாகச் சென்ற 10,000 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு!

போலிஸ் தடுப்புகளை அகற்றிவிட்டு, பேரணி சென்றதாக 10,000 விவசாயிகள் மீது ஹரியானா போலிஸார் பெயர் குறிப்பிடாமல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் ‘டெல்லி சலோ’ எனும் பெயரில் டெல்லியை நோக்கி மாபெரும் பேரணியை நடத்தி வருகின்றனர்.

அரசுக்கு எதிராக பேரணியில் ஈடுபடும் விவசாயிகள் கூட்டத்தைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் போலிஸார் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். விவசாயிகள் மீது தடியடிப் பிரயோகமும் நடத்தப்பட்டது.

எனினும், டெல்லிக்குச் செல்வதில் விவசாயிகள் உறுதியாக இருந்த நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்குக் காவல்துறை அனுமதி அளித்தது. விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று விவசாயிகள் ஹரியாணா எல்லை வழியாக டெல்லிக்குள் நுழையாமல் தடுக்க தடுப்பு போலிஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர். விவசாயிகள் இந்த தடுப்புகளை அப்புறப்படுத்திவிட்டு அங்கிருந்து டெல்லிக்குள் நுழைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது 10 ஆயிரம் விவசாயிகள் மீது பெயர் குறிப்பிடாமல் போலிஸார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இதனை தாப்வாலி காவல் நிலைய ஆய்வாளர் ஈஸ்வர் சிங் உறுதி செய்து உள்ளார்.

விவசாயிகள் மீது ஹரியாணா பா.ஜ.க அரசு கொலை முயற்சி, கலவரம் செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மூன்று லட்சம் விவசாயிகள் டெல்லி போராட்டத்துக்கு வரவிருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

Also Read: “தடைகளை கடந்து டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்” : மோடி அரசைக் கண்டித்து 3வது நாளாக விவசாயிகள் போராட்டம்!