India

“விபரீதம் தெரியாமல் பள்ளிகளை திறந்த பா.ஜ.க அரசு” : ஹரியானாவில் இதுவரை 100 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா ஊரடங்கால் 6 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று இந்தியாவில், இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், பல மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலும் கூட நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் என பல துறைகளை சார்ந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து தமிழக அரசு அறிவிப்பை திறம்ப பெற்றது.

இந்நிலையில், மக்களின் எதிர்ப்பை மீறி பா.ஜ.க ஆட்சி செய்யும் ஹரியானாவில் பள்ளிகளை அம்மாநில அரசு திறந்ததால், இதுவரை 100 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 2 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் செப்டம்பர் இறுதி வாரம் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ரேவாரி மாவட்டத்தில் 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இரண்டு பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதேபோன்று பார்லி குண்டு மாவட்ட பள்ளிகளிலும் சேர்ந்த 25 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேறு சில பள்ளிகளில் ஆயிரம் மாணவர்களுக்கு சோதனை நடத்தியதில் 34 மாணவர்களுக்கு அறிகுறி எதுவும் இல்லாத நிலையில், தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகள் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால் மாணவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களும் பள்ளிக்களை திறக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “பள்ளிகள் திறப்பு - ஒத்திவைப்பு குழப்பங்கள் அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது” : மு.க.ஸ்டாலின் சாடல்!