கைது செய்யப்பட்ட வீரப்பன் (போக்குவரத்து ஊழியர்)
India

லஞ்சம் வாங்கிக்கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பிக்கொடுத்த அரசு ஊழியர் - புதுச்சேரியில் கைது!

புதுச்சேரி 100 அடி சாலையில் அமைந்துள்ளது மாநில போக்குவரத்து துறை அலுவலகம். இங்கு, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, உரிமம் இன்றி சுற்றுலா பயணிகளுக்கு இருசக்கர வாகனங்களை வாடகைக்கு கொடுத்ததாக, 20 இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்து போக்குவரத்து துறை அலுவலகத்திற்குள் நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 31ம் தேதி, அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை, போக்குவரத்து துணை ஆணையர் சத்தியமூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது 20 இரு சக்கர வாகனங்களில் 11 வாகனங்கள் மட்டுமே இருந்துள்ளன. மீதமுள்ள 9 இரு சக்கர வாகனங்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

இதனையடுத்து, 9 இரு சக்கர வாகனங்கள் காணாமல் போயிருப்பது குறித்து, போக்குவரத்து துணை ஆணையர் சத்தியமூர்த்தி, முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரை அடுத்து, போலிஸார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன வாகனங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் வீரப்பன், பணத்துக்கு ஆசைப்பட்டு 9 இரு சக்கர வாகனங்களையும், அதன் உரிமையாளர்களிடம் கொடுத்து பணம் பெற்றுள்ளது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, வீரப்பனை கைது செய்த போலிஸார், 9 வாகனங்களையும் மீட்டு போக்குவரத்து துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் வீரப்பனை, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Also Read: “மரணக்குழியிலும் ஊழல் நாற்றமா? - அதிமுக கும்பலின் மோசடிக்குத் துணை போகிறதா பாஜக அரசு?” : மு.க.ஸ்டாலின்!