India

சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்ற பெண்ணுக்கு ஐ.ஏ.எஸ் பணி மறுப்பு - அரசுக்கு நிர்வாகத் தீர்ப்பாயம் நோட்டீஸ்!

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணான பூர்ணசுந்தரிக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் ஒதுக்கப்படாதது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மணிநகரத்தைச் சேர்ந்தவர் எம்.பூரணசுந்தரி (25). பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் 2019-ம் ஆண்டு நான்காவது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அகில இந்திய அளவில் 286-வது இடம் பெற்றார். இவருக்கு ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய்ப் பணி) பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தனக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் ஒதுக்கக் கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் பூர்ணசுந்தரி மனுத் தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில், “ஓ.பி.சி இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படி எனக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் ஐ.ஆர்.எஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. ஓ.பி.சி பிரிவில் என்னை விடக் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயக் கிளையின் தலைவர் எஸ்.என்.டீர்டல், நிர்வாக உறுப்பினர் சி.வி.சங்கர் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், எஸ்.பாஸ்கர் மதுரம் வாதிட்டனர்.

2019-ம் ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து செப்டம்பர் 21 அன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியல் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: தமிழகத்தில் கொரோனா : குறைகிறதா? குறைத்துக் காட்டப்படுகிறதா? - பொதுமக்கள் எழுப்பும் சந்தேகங்கள்! #Corona