India
சிக்னல் கிடைக்காததால் தினமும் 3 கி.மீ மலையேறி கற்கும் மாணவர்கள் : ஆன்லைன் கல்வியால் அரங்கேறும் அவலம்!
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் 7 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகளும், மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை இணையவழியில் பாடங்களை நடத்தி வருகின்றன.
அதேபோல கலைக் கல்லூரிகள், தொழிற் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள், இணைய வழி கற்பித்தல் முறையைப் பின்பற்றி வரத் தொடங்கியுள்ளன. இணைய வழி கற்பித்தல் என்பது நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்ற நிலை தொடர்கிறது.
மேலும், இணையவழிக் கல்வி ஆபத்தானது என்றும், அது மாணவர்களுக்கிடையே பாகுபாட்டினை வளர்க்கும் என்றும் இணைய வழிக்கல்வி வகுப்பறை கல்விக்கு மாற்றானது அல்ல என்றும் தி.மு.க தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பற்ற ஏழை எளிய குழந்தைகள் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் குற்றம சாட்டினர்.
குறிப்பாக, ஆன்லைன் வகுப்புக்கு தேவையான மொபைல், கணினி, இணைய வசதி போன்ற எந்த வசதிகளும் இல்லாத ஏழைக் குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது அரிதான ஒன்றாக மாறிப்போயுள்ளது.
அதுமட்டுமல்லாது செல்போன் இல்லாத மாணவர்கள் கல்வி பெற முடியாத வருத்தத்தில் மனமுடைந்து பலர் தற்கொலை செய்துகொள்ளும் அவலமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் சிக்னல் கிடைக்காததால், தினமும் 3 கி.மீ மலையேறி மாணவர்கள் கல்வி கற்கும் அவலம் கோவா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
கோவா மாநிலம், பனாஜி மாவட்டத்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் பாட்ரே, குமாரி என்ற மலைக் கிராமங்கள் உள்ளது. ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும் இந்த மலை கிராமங்களில் இரண்டு பள்ளிகள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெறுவதால் பல்வேறு சிரமங்களை இந்த மலைக் கிராம மாணவர்கள் சந்திக்கின்றனர். குறிப்பாக, செல்போன் சிக்னல் கிடைக்காததால், தினமும் 3 கி.மீ தூரம் மலையேற்றம் செய்து மலை உச்சிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அங்கு மட்டும்தான் செல்போன் சிக்னல் கிடைப்பதால் 25 மாணவ, மாணவிகள் தினமும் மலை உச்சிக்கு செல்கின்றனர். சில நேரங்களில் ஆன்லைன் வகுப்பின்போது பல்வேறு விலங்குகளின் அச்சுறுத்தலையும் மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். இந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களை பத்திரமாக அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வருகின்றனர்.
ஆன்லைன் வகுப்பு நடத்துவதாக அறிவித்த அரசு அனைத்து தரப்பு மாணவர்களாலும் பங்கேற்க முடியுமா என சிந்திக்கத் தவறியதன் விளைவாகவே இந்த மலைக் கிராம மாணவர்கள் தினமும் மலையேறி கல்வி கற்கின்றனர்.
இதனையடுத்து, இணைய வழி கற்பித்தலுக்கு மின் வசதி, இணையதளத் தொடர்பு, கணினி, ஸ்மார்ட் போன் போன்ற வசதிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்திருக்கின்றதா?, ஒரே குடும்பத்தில் இரண்டு, மூன்று குழந்தைதள் இருப்பவர்களுக்கு தனித்தனியே அனைத்து வசதிகளுக்கும் உள்ளதா? என்பதையும் அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!