India

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மகன் - அதிர்ச்சி சம்பவம்!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பாலாமணி. 65 வயதான மூதாட்டியான இவர் முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் பாலாமணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவர் பூரண குணம்பெற்று, கொரோனா தொற்று இல்லை என கடந்த வாரம் பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அவரது மகனை தொடர்பு கொண்டு தகவல் சொல்ல முயற்சித்தது. அவருடைய செல்லிடப்பேசி இணைப்பு கிடைக்கவில்லை. இறுதியாக மருத்துவமனை நிர்வாகத்தினர் பாலாமணியை அவரது வீட்டு வாசலில் கொண்டுவந்து இறக்கிவிட்டுச் சென்றனர்.

ஆனால் தனது தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மகன் மறுத்துவிட, கொரோனா தொற்று காரணமாக முதியோர் இல்லமும் மூடப்பட்டதால் செல்ல வழியின்றி, வீட்டின் எதிரில் உள்ள காலியிடத்தில் தங்கியிருக்கிறார் பாலாமணி.

வீட்டில் இருந்தால் அக்கம் பக்கத்தினர் கேட்பார்களே என்று அஞ்சி, மின்சாரத் துறையில் உதவி பொறியாளராக இருக்கும் பாலாமணியின் மகன், வீட்டைப் பூட்டிவிட்டு, தனது மனைவி, பிள்ளைகளுடன் வெளியே சென்றுவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மூத்த நீதிபதி கிரண்மயி, தேவையான உதவிகளை அளிப்பதாக பாலாமணிக்கு உறுதி அளித்துள்ளார்.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக பெற்ற தாயை மகனே வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ஒரே நாளில் 86,961 பேர் பாதிப்பு; 1,130 பேர் பலி” : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை தாண்டியது!