உச்சநீதிமன்றம்
India

“நீட் தேர்வை ஒத்திவைக்க மீண்டும் மறுப்பு” : மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வு வரும் 13-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணம் காட்டி தேர்வை ரத்து செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் 11 மாணவர்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தேர்வை ரத்து செய்து உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி ஆறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் புதுவை அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உரிய போக்குவரத்து இல்லாத நிலையில் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளனர். கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை உள்ளது. விண்ணப்பித்திருக்கும் 16 லட்சம் மாணவர்களில் பெரும்பகுதியினர் தேர்வு எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

எனவே, மேலும் மூன்று வாரங்கள் தேர்வை ஒத்திவைக்க வேண்டும். அல்லது தேர்வுக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வாதிட்டனர்.

ஆனால், தேர்வுக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also Read: “அனிதா முதல் சுபஸ்ரீ வரை நீட் பலி கொண்ட 8 உயிர்கள்” : அனிதாக்களை மறவோம்..! #ScrapNeet