India

இந்திய பொருளாதாரம் இந்த நிதியாண்டில் மைனஸ் 10.5% ஆக சரியும் - மேலும் கணிப்பை குறைத்த ஃபிட்ச்!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 23.9 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. பா.ஜ.க ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் மிகக் கடுமையான பொருளாதார வீழ்ச்சி குறித்து எதிர்க்கட்சிகள் மோடி அரசை விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவீதமாக வீழ்ச்சியடையும் என சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது.

முன்னதாக, இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மைனஸ் 5 சதவீதமாக சரியும் என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கணித்த நிலையில், முதல் காலாண்டில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் தனது கணிப்பை மாற்றி மைனஸ் 10.5 சதவீதமாக குறைத்துள்ளது.

ஃபிட்ஸ் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கிச் சரிந்துள்ளது என்றும் மீண்டும் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு திருப்ப ஏராளமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படுத்தப்படாத நிலையில், பல்வேறு இடங்களிலும் தொடரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொருளாதார வளர்ச்சியை மோசமாக பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது ஃபிட்ச்.

அதிகரித்து வரும் பணவீக்கம், உயர்ந்திருக்கும் வரிகள் போன்றவை அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.5 சதவீதமாக வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளோம். முன்னதாக ஜூன் மாதத்தில் மைனஸ் 5 சதவீதம் என்று கணித்திருந்தோம்.

இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் மைனஸ் 9.6 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் மைனஸ் 4.8 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் 4 சதவீதமாக வளரும் எனக் கணித்துள்ளோம். ஒட்டுமொத்தமாக, நடப்பு நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவீதம் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக ஃபிட்ச் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: LIC, BPCL நிறுவன பங்குகளை விற்கத் திட்டமிடும் மோடி அரசு - “வெட்கக்கேடான முயற்சி” என ராகுல் காந்தி சாடல்!