India

செப்.,12 முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தமிழகத்திற்கு 3 ரயில்கள் அறிவிப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் இன்று அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எனினும், தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது மத்திய அரசு. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 12-ம் தேதி முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 12 முதல் சென்னையிலிருந்து டெல்லிக்கு தினசரி ஒரு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 80 ரயில்களில் தமிழகத்துக்கு 3 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த ஜி.டி எக்ஸ்பிரஸ் ரயில் சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மாலை 7:15 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் மூன்றாம் நாள் காலை 6:30 மணிக்கு புது டெல்லி சென்று சேரும். அங்கிருந்து மாலை 6:40 புறப்பட்டு சென்னைக்கு காலை 6:30 மணிக்கு வந்து சேரும்.

தற்போது சென்னையிலிருந்து டெல்லிக்கு ராஜதானி சிறப்பு ரயில் வாரம் இரண்டு நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் சென்னையிலிருந்து சப்ராவுக்கும், ஹௌராவுக்கும் வாரம் இரண்டு நாள் கூடுதலாக இரண்டு இரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பயணச்சீட்டுக்கு பதில் QR CODE; மாஸ்க் அணியாவிடில் அனுமதியில்லை: மெட்ரோ ரயில் சேவைக்கான புது கட்டுப்பாடு!