India

“GST தொகையை கொடுக்காமல் மாநில அரசுகளை கடன் வாங்க சொல்வது அருவருக்கத்தக்கது” : மோடி அரசுக்கு CPIM கண்டனம்!

மத்திய அரசு, ஜி.எஸ்.டி நிலுவைத் தொகைகளை மாநில அரசுகளுக்கு அளித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் சார்பில் வியாழன் அன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், 2020-21 நிதியாண்டிற்கு, மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகைகளை, மத்திய அரசால் அளிக்க இயலவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டிருப்பது அட்டூழியமாகும்.

இவ்வாறு மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய நிலுவைத் தொகை என்பது சுமார் 2.35 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த இடைவெளியைச் சரிசெய்திட, மாநில அரசுகள், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறுயிருப்பது அருவருக்கத்தக்கதாகும்.

மத்திய அரசாங்கம், ஜி.எஸ்.டி நிலுவைத் தொகைகளை மாநில அரசுகளுக்கு, சட்டப்படி அளிக்கக் கடமைப்பட்டதாகும். தேவைப்பட்டால், மத்திய அரசாங்கம் கடன் வாங்கி, மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டுமேயொழிய, மாநில அரசுகளைக் கடன் வாங்கிக்கொள்ள, கட்டாயப்படுத்த முடியாது.

கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவுவதற்கு முன்பே, நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கிச் செல்லத்தொடங்கிவிட்டது. இப்போது கொரோனா வைரஸ் தொற்று போன்று ‘Divine Intervention’ ஏற்பட்டுவிட்டதாக, பொருளாதார மந்த நிலைக்குக் காரணம் கூறுவதை ஏற்க முடியாது.

இது ஒட்டுமொத்தமாக மூர்க்கத்தனமானதும், தவறானதுமாகும். மத்திய அரசாங்கம், சட்டப்படி மாநில அரசுகளுக்கு அளித்திட வேண்டிய கடப்பாடுகளை அளித்திட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “பீகார் தேர்தலை நடத்தக்கூடாது என உத்தரவிட முடியாது” - மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!