India

'வீட்டிலேயே கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பது எப்படி?’ - கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயம் இதுதான்!

கொரோனா தடுப்பு மருந்தை வீட்டில் எப்படி தயார் செய்வது என்பதுதான் கூகுளில் அதிக அளவில் தேடப்பட்ட விஷயங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகத்துக்கே சவாலாக விளங்கும் இந்த கொரோனா வைரஸ் மனித இனம் இதுவரை கண்டிராத ஒரு வைரஸாக எல்லோரையும் குழப்பி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸுனுடைய குணநலன்கள் என்னென்ன என்பது குறித்துச் சரியான, முழுமையான, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புரிதல் உலகில் எங்கும் எட்டப்படவில்லை.

பல நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டறிவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். ரஷ்யா கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை அங்கீகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதை மனிதர்களிடையே சோதனை செய்யும் பணிகள் நடந்துவருகின்றன. அதேபோல் தமிழகத்தில் பலர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தகவல் பரப்பி, அவர்களில் சிலர் கைதும் செய்யப்பட்டனர்.

பொதுமக்களும் கொரோனாவிலிருந்து தங்களை காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் எனத் தெரியாமல், கபசுர குடிநீரை வாங்கி பருகி வருகின்றனர்.

இந்நிலையில் கூகுள் தேடலில் கொரோனா தொடர்மான எந்தெந்த விஷயங்கள் அதிக அளவில் தேடப்பட்டன என்பது குறித்த ஆய்வில், ’கொரோனா தடுப்பு மருந்தை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?’ என்பதுதான் அதிக அளவில் தேடப்பட்ட விஷயங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் மக்கள் வீட்டிலேயே கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் அவசரத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் இதுபோன்ற எந்த ஒரு மருந்தையும் வீட்டில் தயாரித்து உபயோகப்படுத்தினால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Also Read: “உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை பதிவு செய்தது ரஷ்யா” - அதிபர் மகளுக்கு நடைபெற்ற பரிசோதனை வெற்றி!