India

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவரின் மனதை உருக்கும் கடைசி ஃபேஸ்புக் பதிவு!

துபாயிலிருந்து கேரளாவுக்கு வந்து விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஷராஃபு பிள்ளசேரியும் ஒருவர். அவர் தன் மனைவி மற்றும் குழந்தையோடு பயணித்துள்ளார். விபத்தில் மரணமடைந்த 19 பேர்களில் அவரும் ஒருவர்.

கேரளாவின் குன்னமங்களத்தைச் சேர்ந்த பிள்ளசேரி, துபாயில் பணி புரிந்து வந்துள்ளார். அவரது மனைவி ஷெரின் மற்றும் மகள் இசா ஃபாத்திமாவுடன் வசித்து வந்துள்ளார். துபாயிலிருக்கும் இந்தியர்களை இந்தியா அழைத்து வரும் வந்தே பாரத் விமானத்தில் எப்படியோ அவர் பயணச்சீட்டு பெற்றுவிட்டார்.

வீடு திரும்புகிறோம் என்ற நம்பிக்கையில் விமானத்தில் ஏறியுள்ளார். அவர் மருத்துவச் சிகிச்சைக்காக கேரளா வந்திருக்கிறார். இதுகுறித்து பிள்ளசேரி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இட்ட பதிவு விளக்குகிறது. விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அவர் ‘வீடடைந்தேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவைப் பார்த்துவிட்டு பலர் அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பிள்ளசேரியின் நண்பர் ஒருவர் பிள்ளசேரி விமான பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக என்ன செய்தார் என்பது குறித்துப் பதிவு செய்துள்ளார்.

அதில் பிள்ளசேரி விமானம் ஏறுவதற்கு முன்பாக ஏழைகளுக்குப் பணம் கொடுத்து உதவியதாகவும், மேலும் தன்னிடம் கொஞ்சம் பணம் கொடுத்து இந்த கொரோனா தொற்று காலத்தில் வேலை இழந்து தவிப்பவர்களுக்குக் கொடுக்கச் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த 172 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் 16 நபர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Also Read: 191 பேர் பயணித்த வந்தே பாரத் விமானம் தரையிறங்கியபோது கோர விபத்து - விமானி பலியானதாக தகவல்!