India

OBC இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம்தான் அனுமதி வழங்க வேண்டும் - இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம்!

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, திமுக, திக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பை ஜூலை 27ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை நிரப்பும் போது அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகள், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகவும், பிறகு உச்ச நீதிமன்றமல் உத்தரவின்படி, அந்த இடங்களில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதாகவும் மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வமான வாதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், உச்ச நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல், மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “மருத்துவப் படிப்பில் OBC இட ஒதுக்கீடு” - தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் ஜூலை 27ல் தீர்ப்பு!