India
மோசமான உடல்நிலை பாதிப்பில் சிறையில் வாடும் சமூக ஆர்வலர்கள் - விடுதலை செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
சிறையில் நோயுற்று வாடும் சமூக ஆர்வலர்கள் சாய்பாபா, வரவர ராவ் உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற அரசியல் கைதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பலரது உடல்நிலை மிகவும் மோசமாகி இருப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த கவலை யைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவர்களில் சிலர் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மிகவும் அதிக அளவில் மிகவும் மோசமான முறையில் வருந்தத்தக்க விதத்தில் அவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதன் விளைவாகவும், அடிப்படை வசதிகள் இல்லாததன் காரணமாகவும் அவர்களின் உடல் நிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அவர்களில் பலர் வெகு காலமாகவே பலவிதமான நோய்களுக்கு ஆளானவர்கள்.
இவர்களில் அகில் கோகோய்க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, சோதனை செய்ததில் ‘பாசிடிவ்’ என்று வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதேபோன்றே வரவர ராவ் உடல்நிலையும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சிறைகளில் ஆரோக்கியமற்ற நிலைமைகள் மற்றும் நெரிசலான நிலைமைகள் காரணமாக கவுதம் நவ்லகா, அனில் டெல்டும்டே, சுதா பரத்வாஜ், ஷோமா சென் போன்ற மனித உரிமை ஆர்வலர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகக் கூடிய சாத்தியக்கூறுகள் இருந்து வருகின்றன.
இதர அரசியல் கைதிகளில் பேராசிரியர் சாய்பாபா நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. 90 சதவீத அளவிற்கு ஊனத்தின் தன்மையுடன் உள்ள அவர், 19 விதமான மருத்துவக் கோளாறுகளுடன் வாழ்ந்து வருபவர். இவற்றில் பல உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவை.
மனித உரிமைகள் மீதான ஐ.நா. சிறப்புப் பதிவாளர்கள் சென்ற ஆண்டு, அவர் உடல்நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவரை விடுதலை செய்திட வேண்டும் என்று கோரியிருந்தார்கள். எனவே, அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்குப் போதிய அளவிற்கு மருத்துவக் கவனம் அளிக்கப் பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!