India

அறிவியல் அமைச்சக உளறலால் உண்மை அம்பலம் - 2021-க்கு முன் கொரோனா மருந்து கிடையாது!?

கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்ஸின் (CoVaccine) என்ற மருந்தை பரிசோதனை செய்ய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது.

சார்ஸ் வைரஸில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த மருந்து இரண்டு கட்டங்களாக பரிசோதிக்கப்பட இருக்கிறது. இதே போல சைடஸ் கேடில்லா (zydus cadila) என்ற நிறுவனமும், மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்க ஒப்புதல் பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் 140 மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 11 மருந்துகள் மட்டுமே சோதனைக்கான ஒப்புதல்களை பெற்றுள்ளன. அவற்றுள் இந்த 2 இந்திய நிறுவனங்களும் அடங்கும்.

ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் சோதனை முடிக்கப்பட்டு மருந்து பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்று ஐ.சி.எம்.ஆர் அறிவித்தது. இது பலத்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சைக்கு மத்தியில் நேற்று, இந்திய அறிவியல் அமைச்சகத்தின் இணையதளத்தில், மருந்து பரிசோதனை பற்றி ஊடக அறிக்கை ஒன்று வெளியானது. அதில், " உலகம் முழுவதும் சோதனையில் உள்ள 11 மருந்துகள் ( இந்திய மருந்துகள் உள்பட) எதுவும் 2021-ம் ஆண்டுக்கு முன்ன வெளியாக வாய்ப்பில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இது வெளியான சற்று நேரத்திலேயே, அறிக்கை திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஒரு வரி மட்டும் நீக்கப்பட்டிருந்தது.

ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பிலும் அறிவியல் அமைச்சக அறிவிப்பிலும் உள்ள முரண் கவனிக்கத்தக்கது. ஒரு மருந்து மனிதர்கள் மீது சரியாக செயல்படுகிறதா, மனிதர்கள் உடலில் செலுத்த ஏதுவானதா, பக்க விளைவுகள் ஏதும் அற்றதா, என்ற முடிவுக்கு வர 12 முதல் 18 மாதங்கள் ஆகும் என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். இதுவே உலக நடைமுறை. ஆனால் 40 நாட்களில் மருந்தை வெளியிடுவோம் என்ற அறிவிப்பு, பீகார் தேர்தல் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்ட மோடி அரசின் மக்கள் செல்வாக்கை உயர்த்துவதற்காகவே செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றும் யுக்தியை பின்பற்றும் மோடி அரசு, மக்களின் உயிரோடு விளையாட வீண் விளம்பரம் செய்யும் உண்மை, இந்திய அறிவியல் அமைச்சகத்தின் உளறலால் அம்பலமாகியுள்ளது.