India

“சீனாவை விட்டுவிட்டு காங்கிரஸ் மீது குறிவைப்பதா?” - பா.ஜ.க அரசை சாடும் காங். தலைவர்கள்!

எல்லைப் பகுதியில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் சீனாவை விட்டுவிட்டு காங்கிரஸ் மீது பா.ஜ.க அரசு குறிவைத்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்திய சீன எல்லைப் பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நிலவி வந்த எல்லை மோதல் பூதாகரமாகியுள்ளது. சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய பா.ஜ.க அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றன.

இராணுவ வீரர்கள் பற்றியும், எல்லை விவகாரம் பற்றியும் பேசும் பிரதமர் நரேந்திர மோடி, சீனாவின் பெயரை தனது உரையில் எங்குமே குறிப்பிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் அகமது படேல் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் நிதி மோசடி செய்ததான புகாரில் அகமது படேல் மீது வலைவிரித்துள்ளது அமலாக்கத்துறை. இதை பா.ஜ.க அரசின் பழிவாங்கும் அரசியல் நகர்வு எனவும் காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் மனீஷ் திவாரி இதுகுறித்து ட்விட்டரில் கூறும்போது, “சீனாவை குறிவைப்பதை விடுத்து மத்திய அரசு காங்கிரஸை குறிவைக்கிறது. அகமது படேல் மீதான அடக்குமுறை என்பது பழிவாங்கும் அரசியலின் சமீபத்திய உதாரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் எல்லை விவகாரம் குறித்துக் கூறும்போது, “பிரதமர் மோடி இந்திய - சீன எல்லை விவகாரத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு, ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து வெளியேறுமாறு சீனாவிடம் கண்டிப்புடன் கூற வேண்டும். சீனாவை அங்கிருந்து வெளியேற்றி இந்திய நிலப்பகுதியை பாதுகாக்க வேண்டும். இதுதான் அரச தர்மம் ஆகும். இதை மோடி செய்யவேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

Also Read: "ஆக்கிரமித்தது சீன துருப்புகளா? சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா?" - மோடியை விளாசும் ப.சிதம்பரம்!