India
“ரிசர்வ் வங்கியைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கி தொகையையும் சுருட்ட மோடி அரசு சதி”- சிபிஐ(எம்) குற்றச்சாட்டு!
மத்திய அரசு, அவசரச்சட்டத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகளைக் கையகப்படுத்தி இருப்பதைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியிருக்கிறது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“மத்திய அரசாங்கம் ஓர் அவசரச் சட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ள 1,540 கூட்டுறவு வங்கிகளைக் கையகப்படுத்திட, ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டிக்கிறது.
கூட்டுறவு வங்கிகள் உட்பட கூட்டுறவுத்துறை மாநில அரசாங்கங்களின் மேற்பார்வையில் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்கள் எதையும் கலந்தாலோசிக்காமலேயே மத்திய அரசு இந்த முடிவினை எடுத்திருக்கிறது. இது நம் நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான மற்றுமொரு தாக்குதலாகும்.
இத்தகைய மத்தியத்துவப்படுத்தும் போக்கு நம் அரசமைப்புச்சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை அம்சங்களின் மீதான தாக்குதலாகும். இது, முழுமையாக கூட்டுறவு வங்கிகளின் சுயாட்சியை அழித்து ஒழிக்கிறது. தற்போது, இந்த வங்கிகளில் 8.4 கோடி பேர், 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு டெபாசிட் செய்து கணக்கு வைத்திருக்கிறார்கள். மத்திய பா.ஜ.க அரசாங்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் தொகையை முன்பு எடுத்துக் கொண்டதைப்போல் இதனையும் எடுத்துக்கொள்ளலாம் என்ற முறையில் அவர்களின் பணத்தின் மீதும் கண்வைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
நாட்டின் பல பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் குறிப்பாக விவசாயத் துறையிலும் கூட்டுறவு வங்கிகளும் கூட்டுறவுத் துறையும் முதுகெலும்பாக இருந்து வருகின்றன. இந்த டெபாசிட் தொகைகளை மத்திய அரசு கையகப்படுத்தும்போது, ஏழைகளில் டெபாசிட் செய்யப்பட்ட இந்தப் பணத்தை, பணக்காரர்கள் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. இது மேலும் கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்களுக்கான ஆதரவை அழித்திடும்.
நாட்டில் உள்நாட்டு அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட 45ஆவது ஆண்டு தினத்தன்று இந்த அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது உண்மையின் நகைமுரணாகும். இது, இந்தியாவின் அரசமைப்புச்சட்ட ஒழுங்கில் பெரிய அளவில் தாக்குதலைத் தொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. எனவே இந்த அவசரச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!