India

“தமிழகத்துக்கு 40 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும்” - கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு!

தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களில் 40 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 6வது கூட்டம் இன்று காணொளிக்காட்சி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் அதன் தலைவர் ராஜேந்திரகுமார் ஜெயின் தலைமையில் நடைபெற்றது. அதன் உறுப்பினர் நவீன்குமார் மற்றும் தமிழ்நாடு, புதுவை, கர்நாடகா, கேரளா, ஆகிய மாநிலங்களின் பொதுப்பணித்துறை செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கர்நாடக அணைகளின் நீர் இருப்பு குறித்தும், தமிழகத்துக்கு இம்மாதம் முதல் திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, “அணைகளில் தண்ணீர் இல்லை. மழை பெய்து தண்ணீர் வந்தால்தான் திறக்க இயலும்” என்று கர்நாடகா தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், கூட்டத்தின் முடிவில் ஜூன் மாதத்துக்கு 9.19 டி.எம்.சி, ஜூலை மாதத்துக்கு 31.24 டி.எம்.சி என இரண்டு மாதங்களுக்கு தமிழகத்துகு 40 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது.

கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை கர்னாடகா எழுப்பியபோது தமிழகம் எதிர்ப்பு தெரிவித்ததால் அதுகுறித்து விவாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “குடியரசுத் தலைவர் யாரென்றே தெரியாதவர் ஆசிரியர் தேர்வில் ‘டாப்பர்’ ” : உ.பி-யில் நடந்த மாபெரும் முறைகேடு!