India

சுகாதார வசதிகளில் படுமோசமான நிலை : “இதுதான் குஜராத் மாடல்” - அம்பலப்படுத்திய பிபிசி!

‘குஜராத் மாடல்’ எனும் வெற்று பிம்பம் சில ஆண்டுகளாக பா.ஜ.க ஆதரவாளர்களாலும், வலதுசாரி ஊடகங்களாலும் ஊதிப் பெரிதாக்கப்பட்டு வருகிறது. பொய்களாலும், புரட்டுகளாலும் கட்டமைக்கப்பட்ட ‘குஜராத்’ மாடல் வளர்ச்சி என ஏமாற்றித்தான் கடந்த முறை ஆட்சியைப் பிடித்து பிரதமர் ஆனார் மோடி.

ஆனால், குஜராத் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி பெறாத மாநிலமாகவே இன்றளவும் இருக்கிறது. சுகாதார துறையைப் பொறுத்தவரை பின்தங்கிய மாநிலமான பீகாரை விட குஜராத்தின் நிலை படுமோசம் என அதிர்ச்சித் தகவலை எடுத்துவைத்திருக்கிறது உலகளாவிய செய்தி நிறுவனமான பிபிசி.

'குஜராத் சுகாதார மாடலின் பயங்கரமான நிலை... அதிகரிக்கும் மரணங்கள்' என பிபிசியின் இந்தி மொழிப் பிரிவில் ஒரு அதிரவைக்கும் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன் சுருக்கமான வடிவம் பின்வருமாறு :

1. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத், கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக மரணங்களைச் சந்தித்த மாநிலம் இது.

2. இந்தியாவில் உள்ள கொரோனா நோயாளிகளில் 65 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில்தான் இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் 74,860 பேர், தமிழ்நாட்டில் சுமார் 28,000 பேர், டெல்லியில் சுமார் 23 ஆயிரம் பேர், குஜராத்தில் சுமார் 18,000 பேர்.

3. ஆனால், மரண விகிதங்களை எடுத்துக்கொண்டால், மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது குஜராத். மகாராஷ்டிராவில் 2,587 பேர்; குஜராத்தில் 1,122 பேர்.

4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் சுமார் 3 சதவீதம் பேருக்கு மரணம் நேர்கிறது. ஆனால், குஜராத்தில் இந்த சதவீதம் மிக அதிகம். மே மாத இறுதியில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக குஜராத்தில்தான் அதிக நோயாளிகள் இருந்தனர்.

5. இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்கள் அகமதாபாதும் சூரத்தும். பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அகமதாபாதில்தான் இருக்கிறார்கள். இறப்பும் இந்நகரில்தான் அதிகம்.

6. அகமதாபாதில் அம்தாவாத் நி பாட் என்ற பகுதியில் ஏழைகள் அதிகம். மக்கள் நெரிசலும் அதிகம். சமூக இடைவெளி என்பதே இங்கு சாத்தியமில்லை. இந்தப் பகுதியில் யாருக்காவது கொரோனா வந்தால் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டும். அங்கே கவனிப்பும் இருக்காது, சிகிச்சையும் இருக்காது.

7. சற்று வசதியானவர்களாக இருந்தால் தனியார் மருத்துவமனையான எஸ்விபி மருத்துவமனைக்குச் செல்வார்கள். அங்கே சிகிச்சை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கும்.

8. ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற அடிப்படை மருத்துவ உதவிகள் கிடைத்திருந்தால், கொரோனா பாதித்தவர்கள் விரைவிலேயே சிகிச்சைக்குச் சென்றிருப்பார்கள்.

9. ஆகஸ்ட் 2018வாக்கில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி குஜராத்தில் 1,474 ஆரம்ப சுகாதார நிலையங்களே இருக்கின்றன. பின்தங்கிய மாநிலமான பீகாரிலேயே 1,899 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன.

10. ஆயிரம் பேருக்கு எத்தனை படுக்கை வசதி என்று எடுத்துப் பார்த்தால், அதில் இந்திய சராசரியைவிட குஜராத் கீழே இருக்கிறது. அதாவது ஆயிரம் பேருக்கு 0.3 படுக்கையே இருக்கிறது. ராஜஸ்தானில் 0.6 படுக்கையும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிஷாவில் 0.4 படுக்கையும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 1.1 படுக்கை இருக்கிறது. அதாவது குஜராத்தைப் போல நான்கு மடங்கு.

11. குஜராத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் 29 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. சிறப்பு நிபுணர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். 90 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன. மக்களிடமும் விழிப்புணர்வு கிடையாது.

12. அகமதாபாத் சிவில் மருத்துவமனையிலிருந்து கணபதி மக்வானா என்பவரை குணப்படுத்திவிட்டதாக டிஸ்சார்ஜ் செய்தார்கள். ஆனால், அவரது உடல் பேருந்து நிலையத்தில் கிடந்தது.

Also Read: “வாக்களிக்காத மக்களை பழிவாங்க 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறதா அரசு?” - மு.க.ஸ்டாலின் விளாசல்!