India

“யானை கொலை வழக்கில் ஒருவர் கைது” : பினராயி அறிவிப்பு முதல் பசுமைத் தீர்ப்பாய உத்தரவு வரை நடந்தது என்ன?

கேரள மாநிலத்தின் வனப்பகுதியில் இருந்து சுமார் 15 வயதுடைய கர்ப்பிணி யானை பாலக்காடு வனத்தையொட்டிய குடியிருப்புப் பகுதிக்கு அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் வெடிபொருளை உட்செலுத்தி வைத்திருந்த அன்னாசிப் பழத்தைக் கடித்தது.

இதனால், யானையின் வாய்ப்பகுதி கடுமையான பாதிப்பை அடைந்ததோடு, அங்கேயே வெள்ளியாறு ஆற்றில் நின்றவாறு உயிர்நீத்தது. இதுதொடர்பாக, மோகன் கிருஷ்ணன் என்பவரின் ஃபேஸ்புக் பதிவுதான் தற்போது அனைவரது உள்ளத்தையும் ரணமாக்கியிருக்கிறது.

முதலில் இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், இரண்டு கும்கி யானைகளை அழைத்து வந்து ஆற்றில் சிக்கிய யானையை மீட்டு அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என்றிருந்தபோது அந்த யானை பரிதாபமாக இறந்தது தெரியவந்துள்ளது. சுற்றுவட்டாரத்தில் விசாரித்தபோது, மக்கள் எவருக்கும் எந்த தொந்தரவும், அச்சுறுத்தலும் கொடுக்காமலேயே இதுநாள் வரை யானை சுற்றித்திரிந்தது எனக் கூறியிருக்கிறார்கள்.

பின்னர், தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட யானையின் உடலை புதைத்து வனத்துறையினர் இறுதி மரியாதைகள் செய்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், வனத்துறை அதிகாரி சாமுவேல் கூறியுள்ளார். இதற்கு முன்பே மனிதர்கள்-காட்டு விலங்குகளுக்கு இடையே எத்தனை எத்தனையோ தாக்குதல்கள் நடந்திருந்தாலும் தற்போது நடந்துள்ள இந்தக் கொடூரம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள் ஆளாகியது. இந்த கொடூரத்தை பலரும் கண்டித்தனர்.

வெறுப்பு பிரச்சாரம்

இதனிடையே யானை கொல்லப்பட்ட வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முதல் வருண் காந்தி, மேனகா காந்தி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதோடு, யானை கொலை விவகாரத்தில் மத சாயம் பூசி, வெறுப்பு பிரச்சாரமும் செய்யத்துவங்கினர். அவர்களை தொடர்ந்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வா கும்பல்கள் யானை உயிரிழந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு கேரளாவின் ஒரு சமூக மக்களை தவறாக சித்தரிக்க முயன்றுவருகின்றனர்.

பினராயி விஜயன் உறுதி :

இந்நிலையில், யானை கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், யானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதியளித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “பாலக்காடு மாவட்டத்தில் ஒரு சோகமான நிகழ்வில் கருவுற்றிருந்த யானை உயிரிழந்தது குறித்து பலரும் கவலை தெரிவித்தனர். இந்தக் கவலையும் கோபமும் வீண் போகாது. நீதி நிலைநாட்டப்படும்.

விசாரணை நடந்து கொண்டுள்ளது. காவல்துறையும் வனத்துறையும் கூட்டாக விசாரணை செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். மூன்று சந்தேகத்துக்குரிய நபர்கள் விசாரணை வளையத்தில் உள்ளனர். தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் நீதி நிலைநாட்டப்படவும் தேவையான அனைத்தும் செய்யப்படும். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே அதிகரிக்கும் மோதல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். காலச்சூழல் மாற்றம் உள்ளூர் மக்கள் மற்றும் வனவிலங்குகள் இரு தரப்பையும் பாதிக்கிறது.

ஆனால், இந்த சோகமான நிகழ்வை சிலர் வெறுப்பு பிரச்சாரத்துக்கு பயன்படுத்த முனைகின்றனர். பொய்களை ஜோடித்து சிலர் உண்மைகளை திரிக்க முயல்கின்றனர். ஒருசிலர் மத வெறுப்பையும் திணிக்க முயல்கின்றனர்.

கேரளம் மீதும் மலப்புரம் மீதும் இழிவை உருவாக்க அவதூறு பிரச்சாரம் நடக்கிறது. மத்திய மந்திரிகளும் இதில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்வுகள் பற்றிய மதிப்பீடில் தவறு இருக்குமானால் அதனைச் சரி செய்யக் கோரலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. எனவே, அவர்களது பொய் பிரச்சாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது என்பது தெளிவாகிறது” எனத் தெரிவித்தார்.

ஒருவர் கைது:

இதனிடையே, யானை உயிரிழந்தது குறித்து காவல்துறையினரும், வனத்துறையினரும் வழக்குகளை பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள வனத்துறை அமைச்சர் தற்போது தெரிவித்துள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் வெடி பொருட்களை விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் இதில் சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர் என பாலக்காடு மாவட்ட காவல்துறை தலைவர் ஜி.சிவா விக்ரம் தெரிவித்துள்ளார்.

வனத்துறை அறிவிப்பு:

மேலும் முதல்கட்ட விசாரணையில், யானை வெடிபொருள் வைக்கப்பட்ட அன்னாச்சிப்பழம் கொடுத்து கொல்லப்படவில்லை என்றும், பொதுவாக வனப் பகுதிகளையொட்டியுள்ள விளைநிலங்களை காட்டுப்பன்றி போன்றவற்றிடமிருந்து காப்பாற்ற விவசாயிகள் பட்டாசுகள் நிரம்பிய பழங்களை பயன்படுத்துவார்கள். இதுபோன்ற ஏதாவது ஒரு பழத்தினை யானை உண்ண முயற்சிக்கும்போது பட்டாசு வெடித்து யானையின் வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்னனர்.

அதேப்போல், யானை உயிரிழந்தது பாலக்காடு என்றும் சமூக வலைதளங்களில் கூறப்படுவதை போல மலப்புரத்தில் அல்ல என்றும் விளக்கியுள்ளனர். பொதுமக்கள் தேவையில்லாத கருத்துகளை நம்பவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

இந்நிலையில் ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு, வன விலங்குகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், மனிதர்கள் - விலங்குகள் மோதலை தடுப்பது குறித்து ஆய்வு செய்யவும், கேரள தலைமை வனக் காவலர் தலைமையில், தென் மண்டல வன விலங்குகள் குற்ற கட்டுப்பாட்டு பிரிவு மூத்த அதிகாரி, அமைதிப் பள்ளத்தாக்கு வனக்காப்பாளர், மன்னார்காடு மற்றும் புனலூர் மண்டல வன அதிகாரி, பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க நீண்டகால நிர்வாக திட்டத்தை சமர்ப்பிக்க இக்குழுவுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அமைதிப் பள்ளத்தாக்கு வனக் காப்பாளர் சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு, தகுந்த திட்டங்களை வகுக்க வேண்டும் என உத்தரவிட்ட தீர்ப்பாயம், ஏற்கனவே திட்டம் வகுத்திருந்தால், அது எந்த நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

இக்குழு ஒரு மாதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், யானை கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை, கைது நடவடிக்கைகள் குறித்தும், யானையின் மரணத்துக்கு காரணமானவர்களிடம் இருந்து இழப்பீடு வசூல் செய்ய எடுத்த நடவடிக்கை குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மற்றும் கேரள வனத்துறைக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

Also Read: கர்ப்பிணி யானைக்கு பழத்தில் பட்டாசு வைத்து கொடூர கொலை... மனிதம் மடிந்ததாக நெட்டிசன்ஸ் கொதிப்பு!