India

“இந்தியாவில் 67 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படும்” : கொரோனா பரவல் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. இந்தியாவை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்த கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு இதுவரை 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளையுடன் 4ம் கட்ட ஊரடங்கு முடிவுள்ள நிலையில் ஊரடங்கை 5ம் கட்டமாக நீட்ட ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவரின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தை தொடவிருக்கிறது. இந்த நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்திய மக்கள் தொகையில் பாதி பேருக்கு அதாவது 67 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் என்று தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறும் என்றும் அதில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியாமலேயே வாழ்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 90 சதவீதத்தில் 5 சதவிதம் மட்டுமே ஆபத்தான நிலையில் இருப்பார்கள், அதாவது 30 மில்லியன் பேர் மட்டுமே ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் 1.30 லட்சம் படுக்கைகள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.

வரும் நாட்களில் பாதிப்பு அதிகரித்தால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உருவாகும். எனவே மத்திய, மாநில அரசுகள் விரைந்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “இந்தியாவின் 17 மாநிலங்களில் ஜூன் 15க்குள் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகரிக்கும்” - ஐ.நா எச்சரிக்கை!