India

“வறுமையால் பெண்கள் நாப்கின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் அவலம்”: கற்காலத்தை நோக்கி திரும்பும் இந்தியா?

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குறிப்பாக தினசரி தொழிலாளர்கள், ஏழை நடுத்தரமக்கள் என பலரும் தங்களின் பொருளாதாரத்தை இழந்து நிர்கதியாக நிற்கின்றனர்.

இந்த சூழலில் தினசரி உணவுக்கே வழியில்லாத மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளைக் குறைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனம் வழங்கச் சென்ற தன்னார்வர்களின் ஏழைப் பெண்களிள் சிலர் “எங்களுக்கு மளிகை பொருட்கள் கூட வேண்டாம். ஆனால் சானிட்டரி நாப்கின்கள் மட்டும்தான் தேவை” என கேட்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் கிராமப் புறப்பகுதிகளில் 89 சதவீதமும், ஊரகப் பகுதிகளில் 62 சதவீதமும் நாப்கின் விநியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆய்வின் மூலம் தெரியந்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வை இந்திய மாதவிடாய் நலக் கூட்டமைப்பு (MHAI) நடத்தியுள்ளது. இந்த இந்திய மாதவிடாய் நலக் கூட்டமைப்பு என்பது நாடு முழுவதும் நாப்கின் தயாரிப்பாளர்கள், என்.ஜி.ஓ.க்கள், கிராமப் பஞ்சாயத்துகள், மகளிர் பள்ளிகள் போன்றோருடன் இணைந்து செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு.

இந்த அமைப்பு சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு ஒன்றில், இந்தியாவில் கிராமப் புறப்பகுதிகளில் 89 சதவீதமும், ஊரகப் பகுதிகளில் 62 சதவீதமும் நாப்கின் விநியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் ஊரடங்கு காரணமாக பள்ளிகளில் வழங்கப்பட்டுவந்த நாப்கின் விநியோகம் தடைப்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் முடக்கத்தின் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் பள்ளி மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் கிடைக்காமல் போகிறது.

வழக்கமாக இது போன்ற மாணவிகளுக்கு பள்ளியிலிருந்துதான் நாப்கின்கள் கிடைக்கும். ஆனால் முடக்க நிலை காரணமாக பள்ளிகள் மூடியிருப்பதால் பல லட்சம் மாணவிகள் நாப்கின்கள் கிடைக்காமல் கவலையில் உள்ளனர். அதேப்போல் அதிக விலைக்கொடுத்து வாங்க முடியாததால் பெண்கள், சிறுமிகள் துணியைப் பயன்படுத்தும் நிலைக்குப் போயிருக்கிறார்கள்.

நாப்கின்னுக்குப் பதில் துணியைப் பயன்படுத்துவது பாக்டீரியா தொற்றுகளுக்கு வழி வகுக்கிறது. உயிருக்கே கூட ஆபத்து வரும் வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த நிலையில் உலக மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அனைத்து ஜன் அவுசாதி கேந்தராக்களிலும் மலிவு விலையில் சானிட்டரி நாப்கின்கள் கிடைக்கின்றன.

இதன் மூலமாக, பல லட்சம் இந்திய பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் உறுதி செய்யப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ஏழை மக்கள் நிலைமை தெரியாமல் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார் என பெண்கள் பலர் விமர்சித்துள்ளனர்.

முன்னதாக பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் மற்றும் உறிஞ்சுவான்களுக்கு 12 சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி விதித்த மோடி அரசிற்கு கண்டனம் தெரிவித்து நாடுமுழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “ஊரடங்கால் இந்தியாவில் 1.2 கோடி பேர் வறுமையின் உச்சத்திற்கு செல்வார்கள்” : உலக வங்கி ஆய்வில் தகவல்!