India

மீண்டும் ஒரு சுஜித்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 12 மணிநேர போராட்டத்துக்கு பிறகு உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் பதஞ்சேரு பகுதியைச் சேர்ந்தவர் கோவர்தன். இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக மெடக் மாவட்டத்தில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்குச் சென்றுள்ளார். விவசாயம் செய்துவரும் கோவர்தனின் தந்தை தண்ணீர் பிரச்சனை நீடித்துவருதால் தனது நிலத்தில் கடந்த வாரம் 3 ஆழ்துளை கிணறுகளை தொண்டியுள்ளார்.

அதில் எதிலும் தண்ணீர் கிடைக்காததால் அன்றே அதனை மூடிவிடுவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார். இதனிடையே குடும்பத்தினர் இருந்ததால் தோட்டத்தில் வேலை செய்யும் ஆட்களை பார்த்துக்கொள்ளும் படி கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றுள்ளார்.

அப்போது, அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த கோவர்தனின் 3 வயது மகன் 120 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான். இதனால் செய்வது அறியாது பரிதவித்த குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்து சிறுவனை மீட்கும் முயற்சியை தொடங்கினர்.

இதனிடையே போர்வெல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டப்பட்டது. மேலும் 5 மணிக்கு விழுந்த சிறுவன் இரவு முழுவதும் குழிக்குள் கிடப்பதால் சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்படாமலிருக்க ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. இரவு நேரம் ஆகிவிட்டதால் விளக்குகள் பொறுத்தப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சம்பவம் குறித்து அறிந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணிகள் நடக்கும் பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். சிறுவன் தற்போது 20 முதல் 30 அடி ஆழத்தில் சிக்கிருக்கலாம் என ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 12 மணி நேர மீட்பு போராட்டத்தின் போது குழந்தை கிணற்றுக்குள்ளே உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு இதே போல மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி 60 மணி நேரம் மீட்புப் பணிகள் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தான் என்பது நினைவுகூறத்தக்கது.

Also Read: “சிறப்பு ரயில்களில் உணவின்றி 3 குழந்தைகள்; 9 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலி”: மோடி அரசால் தொடரும் அவலம்!