India

“சாப்பிட லாயக்கற்ற உளுத்துப்போன உளுந்தை அனுப்பிய மோடி அரசு” : கடுப்பில் திருப்பி அனுப்பிய பஞ்சாப் அரசு!

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்தக் கொரோனா பாதிப்பு காரணமாக 4ம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

அரசின் நிவாரணம் போதாத நிலையில் ஏழை மக்கள் உணவின்றி பெரும் துயரங்களைச் சந்திக்கின்றனர். இந்த பெரும் துயரங்களுக்கு அரசின் நிவாரணமும் முழுமையாக சென்றடையாததே காரணம் என அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், 20 கோடி ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கு கொடுக்கவேண்டிய 5 கிலோ தானியங்கள் மற்றும் கூடுதல் ஒதுக்கீட்டைப் பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் அரசு வழங்கிய பருப்பு தரமாக இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கொரோனா கால நிவாரணமாக, கடந்த மார்ச் 26ம் தேதி அன்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா தொகுப்பை அறிவித்தார். அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் உணவு தானியங்கள் வழங்கப்படும். இந்த தானியங்கள் அந்தந்த மாநில அரசுகளால் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 1.4 கோடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் தானியத்தில், 45 டன் மட்டமான பயன்படுத்த முடியாத உளுந்தம் பருப்பை, மத்திய அரசுக்கே, பஞ்சாப் மாநில அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் வழங்கப்பட்ட உளுந்தம் பருப்பு, மிகவும் மோசமாக இருந்ததாக பொதுமக்கள் புகார் எழுப்பிய நிலையில், அதனை மாநில அரசு அதிகாரியான கிரிஷ் டியலன் சோதித்துப் பார்த்துள்ளார். அப்போது, அந்த பருப்பு துர்நாற்றத்துடன் பூஞ்சை பிடித்து பறவைகளின் எச்சத்துடன் இருந்துள்ளது.

உடனடியாக பருப்பு விநியோகத்தை நிறுத்திய டியலன், இந்த பருப்பு மனிதர்கள் சாப்பிட லாயக்கற்றது எனப் பஞ்சாப் உணவு வழங்கல் துறை இயக்குநருக்குப் புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்தே, உளுத்துப் போன உளுந்தம் பருப்பை, மத்திய அரசுக்கே பஞ்சாப் அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

பஞ்சாப் அரசு கேட்ட உணவு தானியத்தில் 1 சதவிகிதத்தைத்தான் மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், அதையும் ஒன்றுக்கும் உதவாத வகையில் அனுப்பி மக்களை வஞ்சித்துவிட்டதாக பஞ்சாப் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

Also Read: “மோடி அரசின் நிர்வாக தோல்வி அம்பலம்” : 20 கோடி ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு உணவு நிவாரணம் சென்றடையாத அவலம்