India

“நாங்கள் பிச்சைக்காரர்களா? மாநில அரசு உங்களின்கீழ் இயங்கவில்லை”- மோடி அரசால் சந்திரசேகர ராவ் கொந்தளிப்பு!

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மோடி அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை நாட்டில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், அரசியல் கட்சியினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவும் இந்த விவகாரத்தில் பா.ஜ.க அரசை விமர்சிக்கத் தவறவில்லை.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திரசேகர ராவ் பேசியதாவது :

“சுயசார்பு பொருளாதாரத் திட்டமென்பது அப்பட்டமான மோசடித் திட்டம். நிதியமைச்சரின் அறிவிப்புகள் அனைத்தும் சர்வதேச ஊடகங்கள் கேலி செய்யும் அளவுக்கு உள்ளது. எண்களை மட்டுமே குறியாகக் கொண்டு மக்களுக்கும், மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது.

ஊரடங்கு சமயத்தில் பொருளாதார நிதித் தொகுப்பு என்பது மாநில அரசுகளுக்கு அத்தியாவசியமானது. ஆனால், மத்திய அரசோ எதேச்சதிகாரமாக நிலப்பிரபுத்துவக் கொள்கையைப் பேணுகிறது. மத்திய அரசிடம் மாநில அரசுகள் நிதி கேட்பது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்குத்தான்.

நிதி மற்றும் பட்ஜெட் மேலாண்மையில் 2 சதவிகித கூடுதல் கடன்களை மாநில அரசுகள் பெறலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. அப்படியென்றால், வெறும் 20 ஆயிரம் கோடி தான் தெலங்கானாவுக்கு கிடைக்கும்.

இந்தக் கடன்களுக்கெல்லாம் மோடி அரசு வகுத்துள்ள கட்டுப்பாடுகள்தான் நகைப்புக்குரியதாக உள்ளது. மாநில அரசுகளை பிச்சைக்காரர்களை போல மத்திய அரசு நடத்துகிறது. இதுதான் நாட்டில் சீர்த்திருத்தங்களை கொண்டுவருவதா? 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான அறிவிப்பை எப்படி பொருளாதார ஊக்குவிப்புக்கான திட்டமாக ஏற்க முடியும்?

மாநில அரசுகள் அரசியல் அமைப்பு சட்டத்துக்குதான் அடிபணிந்து இயங்குகின்றன. மத்திய அரசின் கீழில்லை. கூட்டாட்சித் தத்துவத்தை தகர்க்கும் வகையிலும், மாநில அரசுகளை கட்டுப்படுத்த நினைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

Also Read: கொரோனா கட்டுப்படுத்தலில் தோல்வி கண்ட பா.ஜ.க - தனிமைப்படுத்துவதற்கு பதில் தனியார்படுத்தலில் ஈடுபடும் அரசு?