India

"வீடில்லா ஏழைகளுக்கு 3 வேளை உணவு வழங்குகிறோம்” - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ‘மாய்மால’ அறிவிப்புகள்!

பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, ‘சுயசார்பு பாரதம்’ என்ற பெயரில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில திட்டங்களை அறிவித்திருந்தார். இந்நிலையில், இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

அவர் அறிவித்ததாவது :

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் அளிக்கப்பட்டுள்ள கடன்களுக்கான வட்டிமே 31ம் தேதி வரை செலுத்தத் தேவையில்லை.

நாடு முழுவதும் 3 கோடி விவசாயிகளுக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.4.22 லட்சம் கோடி அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

25 லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக கடன் அட்டைகள் வழங்கப்படும். கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும் உணவு வழங்கவும் ரூ.11,000 கோடி நிதி.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தங்க இடம் கொடுக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்தி கொள்ள அனுமதியளித்தோம்.

நகர்ப்புறத்தில் வாழும் வீடில்லா ஏழைகளுக்கு மத்திய அரசின் சார்பில் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் கிராமங்களிலேயே 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கிடைக்க நடவடிக்கை.

ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த உணவு தானியங்கள் சென்றடையும்.

முத்ரா திட்டத்தில் வட்டி சலுகைக்காக ரூ.1,500 கோடி செலவு செய்யப்படுகிறது. முத்ரா திட்டத்தில் குறித்த காலத்தில் கடனை திப்பி செலுத்துவோருக்கு 2 சதவீத வட்டி சலுகை வழங்கப்படும். முத்ரா சிஷூ திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களுக்கு சலுகை வழங்கப்படும்.

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்க சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அவர்களுக்கு கடன் வழங்குவதற்காக 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கடனுதவியால் 50 லட்சம் வியாபாரிகள் பயனடைவார்கள்.

‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். மார்ச் 2021க்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம்.

Also Read: “இப்போதும் வெறுங்கையால் முழம் போடும் வேலைதானா?” - பா.ஜ.க அரசின் அறிவிப்புகளை விளாசும் மு.க.ஸ்டாலின்!