India
“புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பற்றி மோடி அரசு சிந்திக்கவில்லை”: சாகும் வரை உண்ணாவிரதம் -சமூக ஆர்வலர் கைது!
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அன்றாடம் தொழில் செய்து பொருள் ஈட்டும் ஏழை எளிய மக்கள் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். எந்த வித ஏற்பாடுகளும் இன்றி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாகவே தங்கள் சொந்த கிராமத்திற்கு சென்றனர்.
இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உணவின்றியும் சாலை விபத்திலும் உயிரிழந்தனர். குறிப்பாக, வேலையில்லாமல், உணவு உண்ணாமல் கடுமையான இன்னல்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல், சமூகநலக் கூடங்களிலும், பள்ளிகளிலும் பல்வேறு பகுதிகளில் அடைந்து கிடக்கிறார்கள். சுமார் 40 நாட்களுக்கு மேலாக பல்வேறு சிரமங்களை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
ஏன், சமீபத்தில் கூட, மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் பசி மயக்கத்துடன் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சரக்கு ரயில் மோதியதில் 14 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அரசின் இந்த அலட்சியத்தைக் கண்டித்து மகாத்மா காந்தியின் நினைவிடம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலரை போலிஸார் கைது செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரவீன் காஷி, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தியும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்துத்தராத மத்திய அரசைக் கண்டித்து, நேற்றைய தினம் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.
அவர் போராட்டம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மழை பெய்தது, இருப்பினும் மழையை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் தனது போராட்டத்தை தொடர்ந்தார். இதனையடுத்து செய்தியாளர்கள் சமூக ஆர்வலர் பிரவீன் காஷி சந்தித்து, எதற்காக இந்த போராட்டம் என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.
அப்போது பதில் அளித்து பேசிய பிரவீன் காஷி, மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார். அதாவது, “கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, முககவசம் மற்றும் சானிடிசர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்; சரியான ரேஷன் மற்றும் உணவை வழங்கவேண்டும்; மற்றும் வேலையில்லாத அனைவருக்கும் இழப்பீடாக ஒரு நாளைக்கு ரூ.250 வழங்க இந்த அரசு ஏற்பாடு செய்யவேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் நாங்கள் கண்டோம். அவர்களின் நிச்சயமற்ற எதிர்காலம் குறித்த அச்சங்கள் மற்றும் கவலைகள் பற்றி தெரிந்துக்கொண்டோம். இந்த அரசாங்காம் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை.
ஏன் இங்கிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயணம் செய்கிறார்கள்? ஏனென்றால், அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களுக்கு போதுமான உணவு மற்றும் தங்குமிடம் கூட சரியாக வழங்கப்படவில்லை. இந்த தொற்றுநோய் அனைத்து வகையான வெளிப்புற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கிறது - மக்களுக்கு உணவு இல்லை, பிற சுகாதார பிரச்சினைகளுக்கான மருத்துவ சேவை என அனைத்துமே குறைவு.
இந்நிலையில், தெருவில் லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சிறு குழந்தைகளுடன் வெறும் வயிற்றில் நகர்கிறார்கள். அவர்களின் குரல் ஏன் அரசாங்கத்தை அடையவில்லை? இந்த நாட்டில் நல்ல அளவு செல்வம் உள்ளவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் உயிர்வாழ தினசரி வருவாயே நம்பியுள்ளவர்கள் பற்றி நாம் ஏன் சிந்திக்கவில்லை?” எனத் தெரிவித்தார்.
இதனிடையே தரியகஞ்ச் நிலையத்திலிருந்து ராஜ்காட்டிற்கு வந்த போலிஸார், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக காஷியை கைது செய்து அழைத்துச் சென்றனர். எவ்வாறாயினும், புலம்பெயர்ந்தோருக்கு உரிய தொகை கிடைக்கும் வரை தனது போராட்டத்தைத் தொடருவேன் என்று காஷி கூறியுள்ளார். போலிஸாரின் இந்த அணுகுமுறை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!