India

உணவுக்கு வழியில்லாமல் ஊர் திரும்பிய தொழிலாளர்கள் 14 பேர் ரயில் மோதி பலி - பொறுப்பேற்குமா மோடி அரசு?

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அன்றாடம் தொழில் செய்து பொருள் ஈட்டும் ஏழை எளிய மக்கள் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். எந்த வித ஏற்பாடுகளும் இன்றி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாகவே தங்கள் சொந்த கிராமத்திற்கு சென்றனர்.

இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உணவின்றியும் சாலை விபத்திலும் உயிரிழந்தனர். குறிப்பாக, வேலையில்லாமல், உணவு உண்ணாமல் கடுமையான இன்னல்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல், சமூகநலக் கூடங்களிலும், பள்ளிகளிலும் பல்வேறு பகுதிகளில் அடைந்து கிடக்கிறார்கள். சுமார் 40 நாட்களுக்கு மேலாக பல்வேறு சிரமங்களை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலையில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் பசி மயக்கத்துடன் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சரக்கு ரயில் மோதிச் சென்றதில் 14 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பரிதாமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயம்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் இதுகுறித்த தகவலை அவுரங்காபாத் காவல்துறைக்கு தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து போலிஸார் நடத்தப்பட்ட விசாரணையில் பலியான தொழிலாளர்கள் மகாராஷ்டிராவின் ஜால்னா என்ற பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் என்றும் அவர்க மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரும்பு தொழிற்சாலையில் இருந்து 170 கி.மீட்டர் பயணித்து இந்த ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து சொந்த மாநிலத்திற்கு செல்வதாக முடிவு எடுத்துள்ளனர். 45 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதையில் சென்றவர் ரயில்கள் வராது என பசி மயக்கத்தில் தண்டவாளத்தில் படுத்திருக்கலாம் என போலிஸார் சந்தேகின்றனர்.

காயம்பட்டவர்களுக்கு முதல்கட்ட சிகிச்சை முடிந்த பிறகே மற்ற தகவல் வெளிவரும் என போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.