India

“ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையா? அரசின் தோல்விக்கு சான்று” - ராஜினாமா குறித்து காங்கிரஸ் சாடல்!

பணியாற்றும் இடத்தில் தனக்கு உரிய பாதுகாப்பு இல்லை என ஹரியானா மாநிலத்தில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராணி (36) 2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் கேடரை சேர்ந்தவர். இவர் தற்போது ஹரியானா மாநிலத்தில் மாநில ஆவண காப்பகத் துறை இயக்குநராகப் பொறுப்பேற்று, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கூடுதல் இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இவர் திடீரென ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை மாநில அரசின் தலைமை செயலாளாருக்கும், அதன் நகல்களை முதல்வர், ஆளுநர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துவிட்டு சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்திற்குச் சென்றுள்ளார்.

தனது ராஜினாமா குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், அரசுப் பணியில் இருந்தாலும் எனக்கு தனிப்பட்ட பாதுகாப்பு முக்கியம் என்பதால் நான் ராஜினாமா செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்தில் ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அரசு கடமையில் தனிப்பட்ட பாதுகாப்பை காரணம் காட்டி ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், “ஐ.ஏ.எஸ் அதிகாரியின் ராஜினாமா அதிர்ச்சி அளிக்கிறது. ஆளும் பா.ஜ.க அரசை எதிர்த்து ஒரு மூத்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அரசு கடமையில் தனிப்பட்ட பாதுகாப்பை காரணம் காட்டி ராஜினாமா செய்தால், ஹரியானாவில் யார்தான் பாதுகாப்பாக இருப்பார்கள். இது உங்கள் அரசின் மீது நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறதல்லவா. இது உங்கள் அரசின் தோல்விக்கு சான்று” என விமர்சித்துள்ளார்.

Also Read: “ஆக்கப்பூர்வமாக மக்களை காக்காமல் அரசியல் நோக்கத்துடன் அதிமுக அரசு செயல்படுகிறது” - மு.க.ஸ்டாலின் சாடல்!