India

“உணவுக்கு வழியில்லாத தொழிலாளர்களிடம் கட்டணம் கேட்கும் ரயில்வே நிர்வாகம்” : வசூல் ராஜா ஆன மோடி அரசு!

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அன்றாடம் தொழில் செய்து பொருள் ஈட்டும் ஏழை எளிய மக்கள் சொல்ல இயலாத துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். வேலையில்லாமல், உணவு உண்ணாமல் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல், சமூகநலக் கூடங்களிலும், பள்ளிகளிலும் பல்வேறு பகுதிகளில் அடைந்து கிடக்கிறார்கள். சுமார் 40 நாட்களுக்கு மேலாக பல்வேறு சிரமங்களை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

இதுபோன்ற பாதிக்கப்பட்ட ஏராளமான தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக டெல்லி, மும்பை, மேற்குவங்கம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலிஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியது. இதனையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க பல்வேறு அரசியல் கட்சியினர் மத்திய அரசுக்கு வலியுறுத்தினர்.

இதனையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மாநில அரசின் ஒத்துழைப்பு இருந்தால் போக்குவரத்து ஏற்பாடு செய்து மீட்டுச்செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து கர்நாடகா, தெலுங்கானா என சிக்கித் தவிக்கும் 1000க்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பட்டனர்.

மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இயக்கப்படும் ரயில்களுக்கு முன்பு வசூலிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, சிறப்பு ரயில்களில் சாதாரண சிலிப்பர் வகுப்பு கட்டணத்துக்கு கூடுதலாக ரூ. 50 வசூலிக்கப்படும் என்றும் நாட்டில் இயக்கப்பட உள்ள அனைத்து சிறப்பு ரயில்களுக்கும் இந்த கூடுதல் கட்டணம் பொருந்தும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதில், தெற்கு ரயில்வே உள்பட அனைத்து ரயில்வே பகுதிகளுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சிறப்பு ரயில்களில் ஒரு பயணிக்கு ரூ. 50 வசூலிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

சென்னை முதல் பெங்களூர் வரை இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான குறுகிய பயணத்துக்கு சிலிப்பர் வகுப்பு கட்டணம் ரூ. 260 ஆகும். இந்த பகுதிகளுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் கிலோ மீட்டர் எண்ணிக்கையின் அடிப்படையில் விலை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதேப்போல் பேருந்துக் கட்டணத்தையும் மாநில அரசுகள் நிர்ணயித்துள்ளது. ஒரு கொடிய நோயால் வாழ்வாதாரம் இழந்துப்போன மோசமான சூழலில் வேலையில்லாதோர் வீட்டிற்கு செல்ல பணம் வேண்டும் என சொல்வது மிகப்பெரிய மனித நேயமற்ற செயல் என அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இன்று வெளி மாநில தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், ரயில் கட்டணத்தை அந்தந்த மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

அதேப்போல் கட்டணம் வசூலிக்கும் முறைக்கு சிபிஐஎம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இடம்பெயர் தொழிலாளர்கள் செல்லும் ரயில்களில் டிக்கட் கட்டணம் இரண்டாம் வகுப்பு + சூப்பர் ஃபாஸ்ட் கட்டணம், சாப்பாடு, தண்ணீர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் வெட்கக்கேடானது. வேதனையுடன் திரும்பி செல்லும் இடம் பெயர் தொழிலாளர்கள் பயணத்திற்கு கட்டணம் நிர்ணயிப்பது கொடூரமானது. தனது பெயரில் மோடி வசூல் செய்த கோடிக்கணக்கான பணம் எதற்காக?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: “தனி நபர்கள் தகவல்களைத் திருடும் ஆரோக்கிய சேது செயலி” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!