India

தொழிலாளர்களுக்கு இலவச போக்குவரத்தை கூட அளிக்காதா? - பயணச் செலவை காங்கிரஸ் ஏற்கும் - சோனியா காந்தி அதிரடி!

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களில் வேலையின்றி, உணவின்றி சிக்கித் தவித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை 40 நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ததோடு, பயணத்துக்கான கட்டணத்தை வசூலிப்பதாக மோடி அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “வெறும் 4 மணி நேரம் மட்டுமே அவகாசம் அளித்துவிட்டு மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியதால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் 1947ம் ஆண்டு பிரிவினைக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், பல கிலோ மீட்டர் தொலைவுக்கு உணவு, மருந்து, பணம் எதுவும் இன்றி குடும்பத்துடன் நடைபயணமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வழிநெடுகிலும் மக்கள் ஆதரவளித்து உதவியநிலையில் அரசு எதுவுமே செய்யவில்லை. தற்போதும் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு மத்திய அரசு பண உதவியோ, போக்குவரத்து வசதியோ செய்துதரவில்லை. மாறாக ரயில் மூலம் அழைத்துச் செல்ல இந்த கொடூரமான நேரத்திலும் மத்திய அரசும், ரயில்வே அமைச்சகமும் கட்டணம் வசூலிக்கிறது. ட்ரம்பின் வருகைக்காக 100 கோடி ரூபாய் செலவிட்ட மோடி அரசால், தொழிலாளர்களுக்காக இலவச ரயில் போக்குவரத்தை அளிக்க முடியாதா?

உழைப்பாளிகளும், தொழிலாளர்களுமே நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும், அவர்களது கடின உழைப்பும் தியாகமுமே நமது நாட்டின் அடித்தளம். எனவே, மத்திய அரசு உதவிக்கரம் நீட்டாத நிலையில், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப அந்தந்த மாநில காங்கிரஸ் சார்பில் தேவையான வசதிகளை செய்துதர வேண்டும். மேலும், தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணங்களை காங்கிரஸ் கட்சியே ஏற்கும்.” என சோனியா காந்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Also Read: “உணவுக்கு வழியில்லாத தொழிலாளர்களிடம் கட்டணம் கேட்கும் ரயில்வே நிர்வாகம்” : வசூல் ராஜா ஆன மோடி அரசு!